ADDED : டிச 27, 2024 06:14 AM

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், இல்லாத பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு நிதி பெறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வுக்காக, ஹைடெக் லேப் வசதி, 2010 முதல் 6,454 பள்ளிகளில் துவங்கப்பட்டது. இதற்காக மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தில் நிதியாக ஒரு லேபுக்கு, 6.40 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது.
இவ்வகுப்புகளில் கணினி அறிவியலுக்கு என தனியாக பாடநுால் கழகம் மூலம் பாடத்திட்டம் தயாரித்து வழங்க வேண்டும். இப்பாடத்தை தியரி, செய்முறையாக கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் இப்பாடத்திற்கான கணினி ஆசிரியர் சம்பளம், லேபிற்கான மின் கட்டணம், இணையதள சேவை கட்டணம் என 2.40 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் என தனியான பாடம் இல்லை. அதற்கு பதில், அறிவியல் பாடத்தில் மூன்று பக்கம் அளவில் ஐ.சி.டி., என்ற பெயரிலான பாடம் இணைக்கப்பட்டுள்ளது. ஹைடெக் லேப்களை ஆன்லைன் தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமக்ரா சிக் ஷா திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இந்த ஐ.சி.டி.,யின் பல கோடி ரூபாய் நிதியை, வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது: மாணவர்களுக்கு கணினி அறிவியலை கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஆண்டு சம்பளமாக, 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக உயர்நிலையில் 6,454, நடுநிலையில் 8,209 என மொத்தம், 14,663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதில், 'இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்' பணியாற்றும் 8,200 தன்னார்வலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இது, மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது. இங்கு, தகுதியுள்ள பி.எட்., படித்த கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -