தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ராஜினாமா செய்ய முடிவா?
தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ராஜினாமா செய்ய முடிவா?
ADDED : நவ 26, 2026 05:53 AM

- நமது சிறப்பு நிருபர் -
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக, த.வெ.க., -- எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில், மக்கள் ஏற்கும் வகையில், உறுதியான முடிவை எடுக்க, த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் விரும்புகிறார். அதேநேரத்தில், சட்டசபையில் த.வெ.க.,விற்கு பெரும்பான்மை இல்லாமல், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது.
சட்டசபையில், த.வெ.க., அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் முக்கியம்.
இந்நிலையில், த.வெ.க., தலைமை உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், அதுபோன்ற எந்த முடிவையும், த.வெ.க., தலைமை எடுக்கவில்லை. எனினும், சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
ஆட்சிக்கும் பாதிப்பு இல்லாமல், மக்கள் மத்தியில் நற்பெயரை தக்கவைக்கும் வகையிலும், முடிவு எடுக்கப்பட உள்ளதாக, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. போலீஸ் உயர் அதிகாரிகளின் விசாரணை முடிவுக்கு பின், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
