பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்.. தப்ப முடியுமா?
பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்.. தப்ப முடியுமா?
UPDATED : அக் 05, 2024 04:53 AM
ADDED : அக் 04, 2024 11:36 PM

சென்னை :'சென்னையில் 792 கி.மீ., மழைநீர் வடிகால்கள் துார் வாரப்பட்டுள்ளன; எஞ்சிய 1,152 கி.மீ., கால்வாய்களில் அக்., 10க்குள் முடிக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில், சென்னையில் 20 செ.மீ., மழை பெய்தாலும் வெள்ளம் சூழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில், குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், குளங்களை துார்வாரி மேம்படுத்துதல், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின், கொடுங்கையூர் கிடங்கில், 'பயோமைனிங்' முறையில் குப்பை பிரித்தெடுக்கும் பணியையும், அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கட்டமைப்பு
தொடர்ந்து, பருவமழை பாதிப்பு தடுக்க, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், முதற்கட்டமாக 792 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. விடுபட்ட, 1,152 கி.மீ., துார பணி, அக்., 10ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
மாநகராட்சியால் பராமரிக்கப்படும், 53.42 கி.மீ., நீளமுள்ள, 33 நீர்வழிக் கால்வாய்களில், இரு ஆம்பிபியன், மூன்று மினி ஆம்பிபியன், ஆறு ரோபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் வாயிலாக, ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல் மண்ணை துார்வாரும் பணிகள் நடக்கின்றன.
தவிர, 1,09,395 வண்டல் மண் சேகரிக்கும் தொட்டிகளில், 73,180 தொட்டிகளில், துார்வாரும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள், அக்., 10க்குள் முடியும்.
கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில், போதுமான அளவில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, பல்வேறு திறன் உடைய 990 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 162 நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளன.
சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் உள்ள பொது சமையற்கூடங்களில், மணிக்கு 1,500 உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் வகையில், கட்டமைப்பு வசதி உள்ளது.
மழைநீர் பாதிப்புகளை கண்காணிக்க, 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, மின்மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் தயாராக உள்ளன.
மாநகராட்சியில், 300 ஆரம்ப சுகாதார மையம், மருத்துவமனைகளில், மருந்துகள் கையிருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொசுக்களால் பரவும், நோய் தடுப்பு பணிக்காக நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என, 3,368 களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
64 லட்சம் ரூபாய்
தவிர, 319 மருந்து தெளிப்பான்கள், 54 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி வாயிலாக இயங்கும், 156 ஸ்பிரேயர்கள், 324 புகை பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகை பரப்பும் இயந்திரங்கள், ஆறு ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிக மழைநீர் தேங்கிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும், கொசு ஒழிப்பு பணிக்காக, 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 100 புகை பரப்பும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று காலை நடந்தது.
இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று இயந்திரங்களை வழங்கினார். மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், ''சென்னையில் 20 செ.மீ., மழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, கூறினார்.