வன்மத்தின் வெளிப்பாடுதான் 'கார்ட்டூன்'கள்; அவதுாறுகளுக்கு நான் கவலைப்பட்டதில்லை முதல்வர் ஸ்டாலின்
வன்மத்தின் வெளிப்பாடுதான் 'கார்ட்டூன்'கள்; அவதுாறுகளுக்கு நான் கவலைப்பட்டதில்லை முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 03, 2025 03:44 AM

சென்னை: ''இன்னும் எங்களை விமர்சனம் செய்யுங்கள்; எவ்வளவு விமர்சனம் வந்தாலும் மக்கள் பணி தொடரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 576 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது.
சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், 32 ஜோடிகளுக்கு திருமணத்தை, முதல்வர் ஸ்டாலின், நடத்தி வைத்தார்.
புதுமண தம்பதியருக்கு, 4 கிராம் தங்கத் தாலி மற்றும் 70,000 ரூபாய் மதிப்பில், 47 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், முதல்வர் பேசியதாவது:
அறநிலையத்துறை சார்பில், இதுவரை 2,376 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. 150 திருமணங்கள் என் தலைமையில் நடந்துள்ளன. நான்கு ஆண்டுகளில், 177 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு சொந்தமான, 7,655 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. நாங்கள் செய்யும் சாதனைகளை, சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணத்துடன் செயல்படுபவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுபவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையான பக்தர்கள், நம் ஆன்மிக தொண்டை பாராட்டுகின்றனர்.
ஒரு வார பத்திரிகையில், நான் காவடி எடுப்பது போன்றும், அமைச்சர்கள் அனைவரும் அலகு குத்தி, தரையில் உருளுவது போலவும் 'கார்ட்டூன்' இடம் பெற்றிருந்தது.
அதை பார்க்கும்போது, எனக்கு பரிதாபமாக இருந்தது. பக்திதான் அவர்கள் நோக்கம் என்றால், நம் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டி இருக்கலாம்.
ஆனால், பல ஆண்டு கால வன்மம் அது. அந்த வன்மத்தின் வெளிப்பாடுதான் இந்த கார்ட்டூன்கள். அவர்களின் அவதுாறுகளைப் பற்றி, நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இன்னும் எங்களை கேலி, கிண்டல் செய்யுங்கள்; கொச்சைப்படுத்துங்கள்; விமர்சனம் செய்யுங்கள்.
எவ்வளவு விமர்சனம் வந்தாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற முறையில், உண்மையான பக்தர்களின் நலனுக்காக தொடர்ந்து செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.