ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
ADDED : மார் 16, 2025 01:25 AM

சென்னை: நம் நாளிதழ் செய்தியை அடுத்து, '10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தமிழக முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்' என்று, தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஹார், உ.பி., டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், 'மக்கானா' எனப்படும், தாமரை விதையில் இருந்து, பல வகை தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
பீஹாரில் அதிகம் விளையும் மக்கானாவை, உலகம் முழுதும் சந்தைப்படுத்த, அம்மாநிலத்தில் மக்கானா வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதேபோல, தமிழகத்தில் அதிகம் விளையும் பலா, முந்திரி போன்றவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் முனைவோரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிப்., 17ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், 10 கோடி ரூபாயில், முந்திரி வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை, அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:
அரியலுார், கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில், 2.09 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு, 43,460 டன் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் முந்திரி உற்பத்தியில், தமிழகம் நான்காவது இடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
எனவே, முந்திரியின் பரப்பை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தமிழக முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.
இதனால், முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகளும், அதை சார்ந்த தொழில் செய்யும் கிராமப்புற மக்களும் அதிகளவில் பயன் பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.