அதிகாரிகளை, ஆசிரியர்களை பாடாய்படுத்தும் ஜாதி வெறி: சீர்கேடுகளை சந்திக்கும் பள்ளிக்கல்வி துறை
அதிகாரிகளை, ஆசிரியர்களை பாடாய்படுத்தும் ஜாதி வெறி: சீர்கேடுகளை சந்திக்கும் பள்ளிக்கல்வி துறை
ADDED : அக் 13, 2025 12:46 AM

அதிகாரிகள் ஜாதி ரீதியாக பிரிந்து செயல்படுவதால், பள்ளிக்கல்வி துறை பல்வேறு சீர்கேடுகளை சந்தித்து வருகிறது.
சமீப காலமாக, அரசு பள்ளிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு, சமூகத்தினர் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அதிகாரிகளும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக்கியமாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்கள், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில், ஜாதிய பாகுபாடுகள் அதிகம் உள்ளதாக புகார் கூறப்படுகிறது.
காரியம் சாதிப்பு இந்த குற்றச்சாட்டு, மாணவர்கள் மீது மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மீதும் சுமத்தப்படுகிறது.
அதாவது, பள்ளிக்கல்வி துறை தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளின் ஜாதியை தெரிந்து கொண்டு, அவர்களது ஜாதியை சேர்ந்த ஆசிரியர்கள், தங்களுக்கான தேர்வுப்பணி, மாற்றுப்பணி, நிர்வாகப்பணி உள்ளிட்ட ஒதுக்கீட்டு காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.
அந்த ஒதுக்கீடுகளில் மற்றவர்கள் போட்டியிடுவதாக தெரிய வந்தால், அவர்களைப் பற்றி மொட்டை கடிதங்களின் வாயிலாக புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை, துணை இயக்குநர்கள் என அனைத்து நிலைகளிலுமே, இந்த மாதி ரியான செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
முறைகேட்டிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபடும் ஆசிரியரை பற்றி, ஒரு தலைமை ஆசிரியர் மேலதிகாரிக்கு புகார் அனுப்பினால், குற்றம் புரிந்தவர் தங்களின் ஜாதியை சேர்ந்தவராக இருந்தால், கண்துடைப்புக்கு விசாரணை அறிக்கை தயாரித்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்கின்றனர்.
அதாவது, தவறிழைத்தவர் மீதான நடவடிக்கைக்கு பதிலாக அவரை காப்பாற்றுவதிலேயே, இந்த ஜாதிப்பற்று அதிகமாக செயல்படுகிறது.
இது, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த அதிகாரிகளிடம் மட்டுமின்றி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரிடமும் அதிகம் உள்ளது.
அவர்கள் தங்களுக்கு பிடிக்காத அதிகாரிகளை, வன்கொடுமை செய்வதாக, ஆணையத்துக்கு புகார் அளித்து, இடமாற்றம் செய்வது, அவர்களின் வளர்ச்சியை தடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நடவடிக்கை தேவை மொத்தத்தில், அனைத்து பிரிவினரிடமும் ஜாதிய வன்மமும், காய் நகர்த்தலும் அதிகம் உள்ளது. இதை அறியும் மாணவர்களும், தங்களின் ஜாதியை சேர்ந்த ஆசிரியர்களிடம் சென்று, மற்றவர்களை பற்றி புகார் கூறுகின்றனர்.
இதனால், பள்ளிகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உணர்வு இல்லாத சூழல் நிலவுகிறது.
இதுபற்றி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பெரும்பாலான ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் ஜாதிய உணர்வு மிகுந்துள்ளது. காரணம், அவர்களின் ஜாதியை சேர்ந்தோர், தலைமை செயலக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ இருந்தால், இடமாறுதல் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றி விடுகின்றனர்.
மேலும், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாக பதவிகளுக்கும், தங்கள் சங்க நிர்வாகிகளை பரிந்துரைக்கின்றனர்.
முக்கியமாக, ஒரு மாவட்டத்திற்கு, புதிதாக கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால், தங்களுக்கு தெரிந்தவர்களின் வாயிலாக, அவரின் பின்புலம், ஜாதி, விருப்பு, வெறுப்பு உள்ளிட்டவற்றை மோப்பம் பிடித்து, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றுவது, தங்களுக்கு உகந்த இடத்துக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உள்ளிட்ட காரியங்களை சாதித்து கொள்கின்றனர்.
இதனால், ஜாதி உணர்வற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாணவர்களை மட்டு மின்றி, ஆசிரியர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -