நாடு முழுதும் 'டிஜிட்டல் கைது' வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்!
நாடு முழுதும் 'டிஜிட்டல் கைது' வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்!
ADDED : டிச 02, 2025 06:06 AM

நாடு முழுதும், 'டிஜிட்டல் கைது' தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடக்கின்றன.
போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், 'மொபைல் போன் வீடியோ' அழைப்பு மூலம், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. ஹரியானாவைச் சேர்ந்த வயதான தம்பதி அளித்த புகாரின்படி, டிஜிட்டல் கைது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜெய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சி.பி.ஐ.,க்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
சைபர் மோசடி வழக்குகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து பதிலளிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகளை பிடிக்க, சர்வதேச போலீஸ் அமைப்பான, 'இன்டர்போல்' உதவியை சி.பி.ஐ., நாட வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க, ஒரு பயனர் அல்லது நிறுவனத்திற்கு பல, 'சிம் கார்டு'கள் வழங்குவதை தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.
சி.பி.ஐ.,-யுடன் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற ஆன்லைன் குற்றங்களை கையாள, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை அமைக்க வேண்டும். மேலும், உள்துறை, தொலைத்தொடர்பு, நிதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -:

