போதை பொருள் கடத்தல் சலீம் கும்பலை பிடிக்க தனிப்படை!: தேடுதல் வேட்டையை துவக்கியது மத்திய அரசு
போதை பொருள் கடத்தல் சலீம் கும்பலை பிடிக்க தனிப்படை!: தேடுதல் வேட்டையை துவக்கியது மத்திய அரசு
ADDED : நவ 18, 2024 12:29 AM

புதுடில்லி:நம் நாட்டில், போதை பொருள் புழக்கம் அதிகரிக்க காரணமான சலீம் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க, 'ஆப்பரேஷன் சாகர் மந்தன்' என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டையை, மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது.
போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்கள், 'கார்டெல்' என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும், போதை பொருள் வினியோகத்தில் பல்வேறு கார்டெல்கள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், நம் நாட்டில் சலீம் கார்டெல் மிகப் பெரிய அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, மொரீஷியஸ், இலங்கை, மாலத்தீவில் இவர்கள் கை மேலோங்கி உள்ளது.
போதை பொருள்
அமெரிக்கா, மலேஷியா, ஈரான், இலங்கை, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள விசாரணை அமைப்புகள் சலீம் கும்பலை தேடி வருகின்றன.
கேரள கடல் பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள், கடந்த 2015ல் பிடிபட்டது.
அப்போது தான் சலீம் என்ற பெயர் முதன்முதலில் வெளி உலகுக்கு தெரியவந்தது.
அதன்பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
சலீமின் கும்பல், ஈரானில் இருந்து போதை பொருட்களை கடத்தி ஆப்கானிஸ்தான், மலேஷியா வழியாக இலங்கைக்கு கொண்டு வருகிறது. அங்கிருந்து சிறிய கப்பல்களுக்கு மாற்றப்படும் போதை பொருட்கள் இந்திய கடல் பகுதிக்கு வந்து இறங்குகின்றன.
சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கும் சலீம் கார்டெலை பிடிக்க, 'ஆப்பரேஷன் சாகர் மந்தன்' என்ற பெயரிலான தனிப்படையை, மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
பறிமுதல்
இவர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், சலீம் கும்பலுக்கு சொந்தமான 4,000 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங் கூறியதாவது:
உலகளவில் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் நெட்வொர்க் நடத்தி வருபவர் சலீம். 'ஹெராயின், மெத் ஆம்பெட்டமைன்' உட்பட பல்வேறு போதை பொருட்களை இந்த கும்பல் உலகம் முழுதும் வினியோகிக்கிறது.
ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் இவர்களுக்கு மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.