பாக்., சதிவலையை முறியடிக்க மத்திய அரசு... தீவிரம்!: ரஷ்ய அதிபர் வருகையால் எகிறும் எதிர்பார்ப்பு
பாக்., சதிவலையை முறியடிக்க மத்திய அரசு... தீவிரம்!: ரஷ்ய அதிபர் வருகையால் எகிறும் எதிர்பார்ப்பு
ADDED : அக் 05, 2025 12:00 AM

உலக நாடுகளில், பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான நட்பே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால், இரு நாடுகளின் நட்பும் வலுவடைந்து இருந்தது. ஆனால், இக்காட்சிகள் திடீரென மாறின. 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்; தன் வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும்' என்றெல்லாம் முரண்டு பிடித்த அதிபர் டிரம்ப், திடீரென இந்திய பொருட்களுக்கு அளவுக்கு அதிகமாக வரியை விதித்தார்.
அது மட்டுமின்றி, இந்தியாவுடனான நட்புறவை முறித்துக்கொள்ள தயாராக இருப்பது போல, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டினார்.
இது தான் தக்க சமயம் என எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான், தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் விறுவிறுப்பாக இறங்கியது.
ஒப்பந்தம் கடந்த மாதம் 30ம் தேதி சவுதிக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தார். அது, தெற்காசியாவில் இந்தியாவுக்கும், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் எதிராக அமைந்தது.
அதாவது, இனி எந்தவொரு நாடும் பாகிஸ்தானை தாக்கினாலும், அது சவுதி மீது தாக்குதல் நடத்தியது போன்றது என்பது தான் அந்த ஒப்பந்தம்.
எரிபொருள், எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், சவுதியுடன் முதலீடு செய்திருக்கும் இந்தியாவுக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அதாவது, ஆப்பரேஷன் சிந்துார் போன்ற ஒரு நடவடிக்கையை பாகிஸ்தான் மீது எடுத்தால், அது சவுதி மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்றாகிவிடும்.
இதனால், இந்தியா - சவுதி இடையிலான நல்லுறவு பாதிக்கப்படுமா; பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியாவுக்கு எதிராக சவுதி போர்க்கொடி உயர்த்துமா என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.
தவிர, இது ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக திருப்பி விடுவதற்கான முயற்சியாக இருக்கக்கூடுமா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்தன.
இந்தியாவும், அந்த ஒப்பந்தம் குறித்து உன்னிப்பாக ஆய்வு செய்து வருவதாக இந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்திருந்தது.
இந்தியாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பாகிஸ்தான் இப்படியொரு ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தாலும், எந்தவொரு வளைகுடா நாடும், நிச்சயம் இந்தியாவுக்கு எதிராக திரும்பாது என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். ஏனெனில், அந்த அளவுக்கு மோடி அரசு வெளியுறவு கொள்கையில் வலுவாக இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
நட்பு நாடு சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு எதிராக சீன வான் பாதுகாப்பு, சீன செயற்கைக்கோள் தரவுகள் ஆகியவற்றை பாகிஸ்தான் பயன்படுத்தி இருந்ததும் தெளிவாகவே தெரிந்தது.
ஆனால், இதிலும் பாகிஸ்தானுக்கு இந்தியா 'ட்விஸ்ட்' வைத்தது. சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, பழைய கசப்புணர்வுகளை மறந்து, வர்த்தக ரீதியாக ஒன்றிணைய சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் கைகுலுக்கினார். இதனால், பாகிஸ்தான் விவகாரத்தில் சீனாவும் சற்று அடக்கியே வாசிக்கும் என தெரிகிறது.
ஏனெனில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா. தேடி வரும் இந்த வாய்ப்பை, சீனா நிச்சயம் நழுவ விடாது என்பதே அரசியல் நிபுணர்களின் மற்றொரு ஆரூடமாக இருக்கிறது.
ரஷ்யாவுடனும், பாகிஸ்தானின் உறவு என்பது ஆழமாக இதுவரை இருந்தது இல்லை. எனவே, ஆயுத கொள்முதலில் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வரும் பாகிஸ்தானின், 'பாச்சா' இந்த முறையும் பலிக்காது.
தவிர, வரும் டிச., 5ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வரவிருப்பதும், தெற்காசியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புடினின் இந்த வருகையால், இந்தியாவுக்கான பாதுகாப்பு வளையம் பன்மடங்கு அதிகரிக்குமே தவிர, நெல் முனை அளவும் குறையாது.
ஏனெனில், இந்தியாவுடனான ரஷ்யாவின் நட்பு என்பது காலங்காலமாக நீடித்து வருகிறது. சுருக்கமாக சொல்வதெனில் ரஷ்யா நம் நீண்டகால நட்பு நாடு.
எனவே, இந்தியாவுக்கு எதிராக எத்தனை சதி வலைகளை பாகிஸ்தான் பின்னியிருந்தாலும், தெற்காசியாவில் நிச்சயம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லாமே புஸ்வாணமாகத் தான் போகும்
- நமது சிறப்பு நிருபர் -.