தமிழக அகழாய்வு முடிவுகளால் மத்திய ஆய்வாளர்களுக்கு நெருக்கடி
தமிழக அகழாய்வு முடிவுகளால் மத்திய ஆய்வாளர்களுக்கு நெருக்கடி
ADDED : பிப் 12, 2025 04:25 AM

தமிழக தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்படும் அகழாய்வு முடிவுகள், மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.
தமிழகத்தில், பத்தாண்டுகளாக தொடர்ந்து பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. அகழாய்வு முடிவுகள், இதுவரை எழுதப்பட்டு வந்த வரலாற்று முடிவுகளுக்கு மாறான தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளன. முக்கியமாக, தமிழகத்தில் கிடைத்துள்ள இரும்பு உலைகள், இரும்பு கசடுகள், இரும்பு கருவிகள் உள்ளிட்டவை, 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற தகவல் உறுதியாகி உள்ளது.
மேலும், சிந்துவெளியில் கிடைத்துள்ள குறியீடுகளை போன்ற குறியீடுகளும் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை குறித்த அறிக்கைகளை, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இதனால், இந்திய வரலாற்று சான்றுகளை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாநில தொல்லியல் அறிஞர்கள், இதை ஏற்க மனம் இல்லாதவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 'தமிழக ஆய்வுகளை ஏற்கவோ, மறுக்கவோ தேவையான ஆவணங்களை, ஏன் மற்ற மாநில அகழாய்வுகளில் சேகரிக்கவில்லை; ஏற்கனவே சேகரித்த தொல்பொருட்கள் சார்ந்த ஆய்வை தீவிரப்படுத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்' என, மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர். அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், மத்திய மாநிலங்களில் அகழாய்வுகளை விரிவாக்க, உரிய நிதியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழக அகழாய்வு அறிக்கைகளை, வடமாநில அறிஞர்களால் ஏற்க முடியவில்லை. அதேநேரம், தமிழகத்தில் ஏற்கனவே ஆய்வு செய்த ஆதிச்சநல்லுார் தொல்பொருட்களை, வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்ப, தேவையான நிதியை கூட பெற முடியவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு பின், தமிழக அரசு தான் நிதியை அளித்தது. அதேபோல், கீழடி அகழாய்வு அறிக்கையை அளித்து, இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் தான் எங்களை போன்ற ஆய்வாளர்களை நெருக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -