ADDED : ஜன 20, 2025 05:09 AM

அமராவதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என, கட்சிக்குள் ஆதரவு வலுக்க துவங்கியுள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பதவி வகித்து வருகிறார். சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ், மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நர லோகேஷ் மேற்பார்வையின் கீழ், தெலுங்கு தேசம் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை சமீபத்தில் நடந்தது. இதில், லோகேஷின் துடிப்பான செயல்பாட்டினால் ஒரு கோடி உறுப்பினர்களை கட்சி எட்டியுள்ளதாக, அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நர லோகேஷுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என, கட்சிக்குள் குரல் வலுக்க துவங்கியுள்ளது.
ஆந்திர சட்டசபை துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜு கூறுகையில், ''கட்சியின் பொதுச்செயலர் நர லோகேஷை துணை முதல்வர் பதவியில் பார்க்க வேண்டும் என, கட்சியினர் விரும்புகின்றனர். இதில் ஜனசேனா கட்சியினருக்கு ஆட்சேபனை இருக்கலாம். இறுதி முடிவு முதல்வரின் கைகளில் தான் உள்ளது,'' என்றார்.
மாநில பா.ஜ., மூத்த தலைவர் லங்கா தினகர் கூறுகையில், ''நர லோகேஷுக்கு நல்ல அரசியல் முதிர்ச்சி மற்றும் நிர்வாக திறன் இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரம், கூட்டணிக்குள் எடுக்கப்படும் அரசியல் முடிவுகள் மாநில மற்றும் தேச நலனை பாதிக்காத வரை பிரச்னை இல்லை,'' என்றார்.