ADDED : அக் 13, 2024 11:58 PM

தமிழக காங்கிரசில், கட்சி பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற, மாநில தலைமை முடிவெடுத்துள்ளதால், மாவட்ட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி இருந்தபோது, துணைத் தலைவர்கள் 52 பேர், பொதுச்செயலர் 52 பேர், செயலர்கள் 120 பேர் என, 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இவற்றில் சிலர், லெட்டர் பேடுகளையும், விசிட்டிங் கார்டுகளையும் வைத்துக் கொண்டு, அடிமட்ட அளவில் கட்சி பணிகளை கவனிக்காமல், மேல்மட்ட அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றபின், நிர்வாகிகளின் செயல்பாடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கட்சிப்பதவியில் உள்ளோர், 60 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த விபரங்களை சேகரித்துள்ளார்.
அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்களின் பதவியையும் பறிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், அம்பத்துார், மதுரவாயல் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளை வைத்து, புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது. கட்சி அமைப்பு ரீதியாக, சென்னைக்கு மட்டும், எட்டு மாவட்ட தலைவர்கள் நியமிக்க வாய்ப்பு உள்ளது.
கட்சி பணிகளை சிறப்பாக செய்து போராட்டம், கூட்டங்களை நடத்தி வரும் மாவட்ட தலைவர்களுக்கு, மாநில நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுதும், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைவர் வீதம், 117 மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர்கள் சிலர், தங்கள் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் பெயரை மாநில தலைமையிடம் பரிந்துரைத்ததும், டில்லி மேலிடம் ஒப்புதல் பெற்றபின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
- நமது நிருபர் -