'காந்தியின் எழுத்துகளால் மாற்றமடைந்து எழுதுவதை 5 ஆண்டுகளாக நிறுத்தினேன்'
'காந்தியின் எழுத்துகளால் மாற்றமடைந்து எழுதுவதை 5 ஆண்டுகளாக நிறுத்தினேன்'
UPDATED : ஜன 05, 2024 04:46 AM
ADDED : ஜன 05, 2024 12:21 AM

''ஒரு நல்ல எழுத்தாளன், தன் எழுத்தில் ஒருபோதும் திருப்தி அடைய மாட்டான்,'' என்கிறார், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான 'நீர்வழிப்படூஉம்' நாவலின் ஆசிரியர் தேவிபாரதி.
அவர் அளித்த பேட்டி:
உங்களைப் பற்றி?
ஈரோடு மாவட்டம், கஸ்பாப்பேட்டை சொந்த ஊர். நல்லமுத்து - முத்தம்மாள்தான் பெற்றோர். நான் பிளஸ் 1 வரை மெட்ரிகுலேஷனில் படித்தேன். அப்பா, பள்ளி ஆசிரியர். அவர் இறப்புக்குப் பின், எனக்கு கல்வித் துறையில் எழுத்தராக பணி கிடைத்தது.
எழுத்தாளரானது எப்படி?
அப்பா ஒரு தேர்ந்த வாசகர். அவரும் எழுதினார். அவர் நிறைய புத்தகங்களை வீட்டில் வைத்திருந்தார். அவற்றைப் படித்தேன்.
அத்துடன், அவர் என்னை அடிக்கடி நுாலகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்படித்தான், தஸ்தாவ்யெஸ்கி, டால்ஸ்டாய் உள்ளிட்ட உலக எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின.
என் 20வது வயதில், 'பாவை' என்ற சிறுகதையை எழுதி, 'பூங்கோதை' என்ற சிற்றிதழுக்கு அனுப்பினேன்; பிரசுரமானது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினேன்.
பின், கவிதைகள், பிரசார நாடகங்கள், குறுநாவல்களை எழுதினேன். எழுதுவது எனக்கு பிடித்தது. பின், அது மட்டுமே பிடித்துப் போனதால், அரசுப் பணியை விட்டு விட்டேன்.
பணியை விட்டதும் எழுதி குவித்தீர்களா?
இல்லை, வாசித்தேன். காந்தியின் நுால்களை வாசித்தபோது, அதன் உண்மைத் தன்மை என்னை உலுக்கியது. அதுவரை நான் எழுதியவற்றின் மீது அதிருப்தி அடைந்தேன். இப்படி தொடர்ந்து ஐந்தாண்டுகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வாசித்தேன்.
தமிழில் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, பூமணி, தி.ஜானகிராமன் உள்ளிட்டோரின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்தேன். அவர்களுடன் பழகி, பல விஷயங்களை கற்றேன். அமெரிக்காவில் தங்கி படித்து, பின்தான் எழுதத் துவங்கினேன்.
எப்போது நாவல் எழுதினீர்கள்?
நாவல் எழுதுவது என் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. என்றாலும், 47 வயதில் தான் நாவல் எழுதினேன். 'காலச்சுவடு' இதழில் பணியாற்றினேன்.
அப்போது, நிறைய விஷயங்களை கற்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தேன். இதற்கிடையில் சாலை விபத்தில் சிக்கி, கடுமையாக பாதிக்கப்பட்டேன். அதனால்தான் இப்போதும் பேச கஷ்டப்படகிறேன்.
உங்கள் நாவல்கள் பற்றி?
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் 'நிழலின் தனிமை' என்ற நாவலை எழுதினேன். தொடர்ந்து 'நட்ராஜ் மகராஜ், நீர்வழிப் படூஉம், நொய்யல்' ஆகிய நாவல்கள் தான் எழுதி உள்ளேன்.
அனைத்திலும் புதுப்புது உத்திகளை கையாண்டேன். கதை மாந்தர்களின் உண்மையான மொழியில், நான் அறிந்த கதைகளை மட்டுமே எழுதுவது என் பழக்கம். எனக்கு தெரியாத ஒன்றை எழுத மாட்டேன்.
பொதுவாக, நல்ல எழுத்தாளன் ஒருபோதும் தன் எழுத்தில் திருப்தியடையமாட்டான். அப்படித்தான் எனக்கும். அந்த திருப்தியின்மைதான் அடுத்த படைப்புக்கு, என்னை இட்டுச் செல்கிறது.
அப்படி எட்டு மாத உழைப்பில் விளைந்ததுதான் 'நீர்வழிப் படூஉம்' நாவல். அதனால்தான், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ளது. அதன் கதாப்பாத்திரங்கள் அனைவரும் என்னுடன் பழகியவர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --