மகளிருக்கான சிறந்த நகரங்கள் சென்னை, திருச்சிக்கு முதலிடம்
மகளிருக்கான சிறந்த நகரங்கள் சென்னை, திருச்சிக்கு முதலிடம்
ADDED : ஜன 08, 2024 02:55 AM

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், பெண்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில், நாட்டிலேயே திருச்சி, சென்னை முதலிடம் பிடித்துள்ளன.
தனியார் நிறுவனமான, 'அவதார்' குழுமம் சார்பில், மக்கள் கருத்துக்கள் அடிப்படையில், 2023ல் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
கள ஆய்வு
நாடு முழுதும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும் கள ஆய்வு செய்து, பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொண்ட, 49 நகரங்களில், தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையில், 48.42 மதிப்பெண் பெற்று, சென்னை முதலிடம் பிடித்தது.அந்த வரிசையில் கோவை 9வது இடத்தையும், மதுரை, 11வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே போல, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, 64 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், 40.39 மதிப்பெண் எடுத்து, திருச்சி முதலிடம் பிடித்தது.
மதிப்பீடு
வேலுார் இரண்டாவது இடத்தையும், சேலம் ஆறாவது இடத்தையும், ஈரோடு ஏழு, திருப்பூர் எட்டு, புதுச்சேரி, 10, திருநெல்வேலி, 29, தஞ்சாவூர், 30, துாத்துக்குடி, 31, திண்டுக்கல், 33வது இடத்தை பிடித்துள்ளன.
பெண்களுக்கான வாழ்வாதாரம், பாதுகாப்பு, பிரதிநிதித்துவம்,கல்வியறிவு, மேம்பாட்டு திட்டங்கள் ஆகிய சமூக உள்ளடக்கம் மற்றும் தொழில் திறன் மற்றும் வாய்ப்பு, பணியிடங்களில் பாலின சமத்துவம்போன்றவற்றை உள்ளடக்கமாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
-நமது நிருபர் -