சென்னை - ஜெட்டா, ரியாத் விமான சேவை நிறுத்தம்: 5 ஆண்டு கடந்தும் எந்த முயற்சியும் எடுக்காத தமிழகம்
சென்னை - ஜெட்டா, ரியாத் விமான சேவை நிறுத்தம்: 5 ஆண்டு கடந்தும் எந்த முயற்சியும் எடுக்காத தமிழகம்
ADDED : ஏப் 11, 2025 04:47 AM

தமிழகத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களுக்கு இடையேயான நேரடி விமான சேவை, ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தமிழக எம்.பி.,க்களும், விமான நிலைய அதிகாரிகளும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக, பயணியர் குறை கூறுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா உள்ளது. இங்குள்ள மெக்கா, மதீனா நகரங்கள், முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொள்ளும் முக்கிய தலமாக உள்ளன. சவுதி அரேபியாவில், ஜெட்டா, ரியாத், மெக்கா, தமாம் போன்ற நகரங்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை.
தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், சவுதி அரேபியாவில் வேலை செய்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாத இடைவேளையில், இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். ஆனால், கொரோனா காலத்துக்கு முன் வரை, சென்னையில் இருந்து ஜெட்டா, ரியாத் நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இருந்தது. இதனால், சிரமமில்லாமல் சென்று திரும்பினர். கொரோனாவுக்கு பின், ஜெட்டா, ரியாத் நகரங்களுக்கு நேரடி விமான சேவை கிடையாது. தற்போது, ஐதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து பயணிக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது.
இது பயண நேரத்தையும், செலவையும் அதிகரிக்கிறது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை செல்வோர், நேரடி சேவையின்றி பெங்களூரு, ஐதராபாத், மும்பை நகரங்கள் வழியாக பயணிக்க வேண்டியுள்ளது. நேரடி விமான சேவைகள் இருந்தால் பயண நேரம் குறையும், விமான கட்டணமும் குறைவாக இருக்கும்.
இதுகுறித்து, விமான போக்குவரத்து ஆர்வலர் உபைதுல்லாஹ் கூறியதாவது; சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்றுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள், சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கின்றனர். இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோரில், தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம். இப்படி செல்பவர்களுக்கு, தமிழகத்தில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது. ஜெட்டா, ரியாத் செல்பவர்களுக்கும், தமிழகத்தில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. மாநில அரசு சார்பாக ஹஜ் பயணத்தின் போது, சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படுகிறது; இது வழக்கமானது.
சென்னையில் இருந்து, சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு விமானங்கள் இயக்க, இந்திய விமான நிறுவனங்களும், அந்நாட்டு விமான நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை. இதை செயல்படுத்த, சென்னை விமான நிலைய அதிகாரிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தியா - சவுதி அரேபியா இடையேயான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், 50 ஆயிரம் வாராந்திர இருக்கைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன. துபாய், அபுதாபி போல இந்த மார்க்கத்திலும் நல்ல, 'டிமாண்ட்' உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஹஜ், உம்ரா ஆப்பரேட்டர்களும், மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தந்ததாக தெரியவில்லை. சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரிகளும், எந்த முயற்சியும் எடுப்பது கிடையாது. இதே நிலை தொடர்ந்தால், அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியில் இருந்து, தமிழக நகரங்கள் நீக்கப்பட நேரிடும். மற்ற நாடுகளுக்கான சேவைகளும் பறிபோகும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -