'இண்டி கூட்டணிக்கு எதிர்காலமே இல்லை' ராகுலுக்கு எதிராக சிதம்பரம் கொளுத்திய பட்டாசு
'இண்டி கூட்டணிக்கு எதிர்காலமே இல்லை' ராகுலுக்கு எதிராக சிதம்பரம் கொளுத்திய பட்டாசு
ADDED : மே 18, 2025 02:02 AM

'இண்டி கூட்டணி குறித்து, சிதம்பரம் பேசியது, ராகுல் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு தான்' என்கிறது, காங்கிரஸ் வட்டாரம்.
முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் எழுதிய, 'கன்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெபிசிட்' என்ற நுால் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 'இண்டி கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. இந்தக் கூட்டணி, எப்படி உருவாக்கப்பட்டதோ, அப்படியே தான் இன்னும் இருக்கிறதா என எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.
மறைமுக விமர்சனம்
'இண்டி கூட்டணி இன்னும் நிலைத்திருந்தால், நான் மகிழ்ச்சியடைவேன். இந்தக் கூட்டணியை இப்போதும் ஒருங்கிணைக்க முடியும்; அதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது' என்றார்.
அதுமட்டுமல்லாது, 'பா.ஜ., ஓர் வலிமையான கட்சி' என்றும் புகழ்ந்துரைத்தார். இந்த பேச்சு தான், இப்போது காங்கிரஸ் கட்சிக்குள் பேசுபொருளாகி இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது, கடும் அதிருப்தியில் இருக்கும் சிதம்பரம், அதை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல், மறைமுகமாக விமர்சித்திருப்பதாக காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜிவுக்கு மிக நெருக்கமாக இருந்த சிதம்பரம், கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவின் நன்மதிப்பையும் பெற்றவர்.
ஆனால், ராகுலிடம் அவருக்கு அவ்வளவு இணக்கம் இல்லை. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கும், ராகுலுக்கும் ஆகவில்லை. அதனால், மகனுக்காக சிவகங்கை தொகுதியை ஒவ்வொரு முறையும் போராடி தான் சிதம்பரம் பெற முடிகிறது.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், ராகுல் தான் கட்சியை இன்றும் வழிநடத்துகிறார். ஒருவேளை, காங்கிரஸ் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் உருவானால், அவர் தான் பிரதமருக்கான சாய்ஸ். அதனால், லோக்சபா எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார்.
கட்சியில் என்ன நடக்கிறது என்பதையே அறிந்து கொள்ளாத ஒரு தலைவராக இருந்து கொண்டு, காங்கிரஸ் போன்ற ஒரு பெரும் இயக்கத்தை வழி நடத்துகிறார்.
மிகுந்த சிரமத்துக்கு இடையில் தான், இந்தியாவில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, பா.ஜ.,வுக்கு எதிராக இண்டி கூட்டணி உருவாக்கப்பட்டது. அறிவிக்காவிட்டாலும், அந்த கூட்டணிக்கும் ராகுல் தான் தலைவர் போல இருக்கிறார்.
எதையும் செய்யவில்லை
ஆனால், கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட அந்த கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சித் தலைவர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து, ராகுல் பேசி இருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது, இண்டி கூட்டணி கூட்டத்தை கூட்டி, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக போராட்டம், பொதுக்கூட்டம் நடத்தி இருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால், இண்டி கூட்டணி உயிர்ப்புடன் இருந்திருக்கும். அசுர சக்தியாக வளர்ந்து நிற்கும் மோடி அரசுக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்களை செய்திருக்கலாம். ஆனால் ராகுல், இதில் எதையுமே செய்யவில்லை.
இதையெல்லாம் கையில் எடுத்து செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் ராகுலுக்குத்தான் இருக்கிறது என கட்சியின் மூத்த தலைவரான சிதம்பரம் மேலோட்டமாக சொல்லிப் பார்த்தார்.
கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலருடைய கருத்தும் அதுதான்.
ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப ராகுல் எதையுமே செய்யாததால், சிதம்பரம் உள்ளிட்ட காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வெகு காலமாக சிதம்பரம் போன்றவர்களுக்கு இந்த எண்ணம் இருந்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் தயங்கி வந்தனர்.
அடுத்தகட்டம்?
இனியும் அமைதியாக இருப்பது சரியல்ல என முடிவெடுத்திருக்கும் சிதம்பரம், குறைந்தபட்சம் இந்த விஷயத்தை எடுத்துக்காட்டி பேசினாலாவது, கட்சிக்குள் பெரிய மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்த்துத்தான், காங்.,கை விமர்சிப்பது போலவும், பா.ஜ.,வை பெருமைப்படுத்துவது போலவும் பேசத் துவங்கி உள்ளார்.
'இண்டி கூட்டணி இப்போது இல்லை; அதை முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும்' என, ராகுலுக்கு மறைமுகமாக செய்தி சொல்லியுள்ளார்.
ஆனால், இதை ராகுல் எப்படி எடுத்துக் கொள்வார் என்பதும், சிதம்பரத்தின் எதிர்ப்பாளர்கள், இதை ராகுலிடம் எப்படி எடுத்துச் செல்வர் என்பதையும் பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். அதன் பின்னரே, ராகுலுக்கு எதிராக சிதம்பரம் கொளுத்திப் போட்ட பட்டாசு வெடிக்குமா அல்லது புஸ்ஸ் போகுமா என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனக்கும், மகன் கார்த்திக்கும் ராகுல் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையும் மனதில் வைத்தே, சல்மான் குர்ஷித் நுால் வெளியிட்டு விழாவில், சிதம்பரம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
-- நமது நிருபர் -