தலைமை தேர்தல் கமிஷனரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
தலைமை தேர்தல் கமிஷனரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2026 05:28 AM

சென்னை: 'தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை உடனே பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், மற்ற தேர்தல் கமிஷனர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல், தன்னந்தனியாக ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளார்.
தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு, தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, கடந்த 10 மாதங்களில், 14 முறை அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் கூட, அவர்கள் புறக்கணிக்கப்பட்டது, தேர்தல் கமிஷன் மீதான நம்பகத்தன்மையை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது தான், தேர்தல் கமிஷன் விதி. ஆனால், மூவரில் இருவருக்கு, தாங்கள் பொறுப்பு வகிக்கும் அமைப்பில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இருந்திருக்கிறது.
இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தலைமை தேர்தல் கமிஷனர் பதவியிலிருந்து ஞானேஷ்குமாரை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
