ஆந்திராவில் கோலோச்சும் முதல்வர் சந்திரபாபு மகன்; இரவு விருந்து கலாசாரத்தால் புது வியூகம்
ஆந்திராவில் கோலோச்சும் முதல்வர் சந்திரபாபு மகன்; இரவு விருந்து கலாசாரத்தால் புது வியூகம்
ADDED : பிப் 18, 2026 01:11 AM

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், 43, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
மக்களின் மனநிலை
முதல்வரின் மகன் என்பதால், ஆந்திர அரசின் அன்றாட நிர்வாகத்தில் அமைச்சர் நாரா லோகேஷ் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த முக்கிய கோப்பும் நகர்வதில்லை. அந்தளவுக்கு அரசிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். சமீப காலமாக, அமைச்சர் நாரா லோகேஷ் முன்னெடுத்து வரும் இரவு விருந்து கலாசாரம், ஆந்திர அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமராவதி மாவட்டத்தின் உண்டவல்லி கிராமத்தில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில், தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., - எம்.பி.,க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சர் நாரா லோகேஷ் இரவு விருந்து அளித்து வருகிறார்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு பேரிடம் தனிப்பட்ட முறையில் அவர் உரையாடுகிறார். அப்போது, தொகுதி பிரச்னைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து அவர்களிடம் கேட்டறிகிறார். இதன் மூலம், அரசுக்கு இணையான நிர்வாகத்தை அவர் செயல்படுத்தி வருகிறார்.
விமர்சனம்
மேலும், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., - எம்.பி.,க்களின் குடும்ப உறுப்பினர்களுடனும் உரையாடும் நாரா லோகேஷ், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அக்கறையுடன் விசாரிக்கிறார். இதன் மூலம், கட்சிக்குள் ஒரு, 'குடும்ப பாணி' தலைமையை உருவாக்க அவர் முயற்சிக்கிறார்.
கடந்த காலங்களில் மக்களுடன் நேரடி தொடர்பு குறைவு என்ற விமர்சனத்திற்கு உள்ளான நாரா லோகேஷ், தற்போது இந்த விருந்து மூலம் தன்னை ஒரு மக்கள் தலைவராக நிலைநிறுத்த முயற்சிக்கிறார். மூத்த தலைவர்களை சார்ந்திருப்பதை தவிர்த்து, எம்.எல்.ஏ-.,க்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதற்கான வழியாகவும் அவர் கருதுகிறார்.
விருந்துக்கு வரும் பெண் உறுப்பினர்களுக்கு, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மங்களகிரி தொகுதியின் புகழ்பெற்ற கைத்தறி சேலைகளை நாரா லோகேஷ் பரிசளிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ., மேலிடத் தலைவர்களின் ஆசி நாரா லோகேஷுக்கு இருக்கிறது. அவரது இந்த நடவடிக்கைகள் அதிகார மாற்றத்தை நோக்கி நகர்வதை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -

