அமைச்சர்கள், மா.செ.,க்களிடம் நிலவரம் குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்கள், மா.செ.,க்களிடம் நிலவரம் குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஏப் 20, 2024 12:02 AM

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சில தனியார், 'டிவி'க்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட சில தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி இழுபறியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில், அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்களை தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் விசாரித்துள்ளார். ஓட்டு சதவீதம் குறையாமல், வெற்றி பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று காலையில் ஓட்டுப்பதிவு துவங்கியதும், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலரிடமும், ஓட்டுப்பதிவு எப்படி இருக்கிறது; தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது; சட்டசபை தொகுதிகள் வாரியாக ஓட்டுப்பதிவு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் பதிவாகிற ஓட்டுகளில், 50 சதவீதத்தை தி.மு.க., கூட்டணி பெற்று விடும் என்றும், வெற்றி வாய்ப்பு சாதகமாகவே இருப்பதாகவும் அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். அனைத்து தொகுதிகளின் நிலவரத்தையும் கேட்டறிந்த பின்னரே, ஓட்டு போடச் சென்றார் முதல்வர்.
- நமது நிருபர் -

