பாராட்டுகளில் மயங்காமல் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
பாராட்டுகளில் மயங்காமல் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 29, 2025 04:38 AM

சென்னை : 'நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிவிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிகிறேன். ஆட்சியின் பயன்களை, அன்பும், நன்றியும் கலந்த குரலில் சொல்லும் பெண்கள், இளம்வயதினர் தங்களின் தேவைகளையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஒருசில திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அதையும் தெரிவிக்கின்றனர். அதை கவனமுடன் கேட்டு நிறைவேற்றுவதை, முதல் கடமையாக கொண்டிருக்கிறேன்.
பாராட்டுகளில் மட்டும் மயங்கிவிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
நேர்மையான விமர்சனங்களை கவனித்து, சரிபடுத்தும் செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக, விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதுாறுகளை புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.
மக்களின் கோரிக்கைகளை கேட்பதுபோல், கட்சியினர் மனக்குரலை அறிந்து கொள்வதற்காக, 'உடன்பிறப்பே வா' எனும், தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடந்து வருகிறது.
தி.மு.க., அரசின் திட்டங்களும், சாதனைகளும், வெற்றிகரமாக தொடர்ந்திட, ஜூலை 1 முதல், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்பு திட்டத்துடனான பரப்புரை பயணத்தை துவக்கி வைக்க உள்ளேன்.
தமிழகத்திற்கான திட்டங்களை புறக்கணித்து, தமிழ் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்போருக்கும், அவர்களுக்கு துணை போகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை. இதை உறுதிசெய்யும் வகையில், 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது.
மாநில கட்சியான தி.மு.க., இந்தியாவில் வேறு எந்த கட்சியும் செய்யாத அளவில், 68,000க்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
கட்சி தொண்டர்கள், தமிழக மக்களை வைத்து, ஓரணியில் தமிழகத்தை கட்டமைப்பர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும், மீண்டும் தி.மு.க., ஆட்சியை அமைப்பதிலும், முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.