ADDED : மார் 08, 2024 05:03 AM

பெங்களூரு: பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பில் தொடர்புடைய மர்ம நபர் பயன்படுத்திய தொப்பியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவர் பஸ்சில் பயணம் செய்த புதிய வீடியோக்கள் கிடைத்துள்ளன. துமகூரு, பல்லாரி, பீதர் என அவர் தொடர்ந்து பயணித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சல்லடை போட்டு, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில், கடந்த 1ம் தேதி மதியம் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 10 பேரில் சிலர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணை
இந்த வழக்கில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், வெவ்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்திஉள்ளனர்.
குண்டு வெடிக்கச் செய்த மர்ம நபர், உணவகத்துக்கு வருவது, ரவா இட்லி வாங்குவது, அதை சாப்பிடுவது, அங்கிருந்து வெளியில் செல்வது போன்ற 'சிசிடிவி' காட்சிகள் முதலில் கிடைத்தன. அவற்றில் அவர் முகக் கவசம், தொப்பி, கையுறை அணிந்திருப்பது தெளிவாக தெரிந்தன.
இதற்கிடையில், அவர் சாலையில் நடந்து செல்லும் போது, ஒரு இடத்தில் முகக் கவசத்தை பாதி கழற்றுவது போன்ற படத்தை, என்.ஐ.ஏ., நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ., வெளியிட்ட படத்தின் அடிப்படையில், ஹர்ஷா என்ற ஓவியர், மர்ம நபர் எப்படி இருப்பார் என்பதை பென்சிலால் வரைந்து, 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தை, என்.ஐ.ஏ., மற்றும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து, பி.எம்.டி.சி., வால்வோ சொகுசு பஸ்சில் ஏறிய நபர், உள்ளே கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின், முன் இருக்கையில் சென்று அமர்ந்து உள்ளார்.
சந்தேகம்
ஹூடி சதுக்கம் பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், சுற்று வட்டாரத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கேயே உடையை மாற்றி, தான் அணிந்திருந்த தொப்பியை கழற்றி வீசிவிட்டு, அங்கிருந்து வேறு பஸ்சில் அவர் பயணம் செய்தது தெரிந்தது.
அந்த தொப்பியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பஸ்சில் முகக் கவசம் இல்லாமல் அவர் அமர்ந்திருக்கும் படமும் கிடைத்துள்ளது. பின், மற்றொரு பஸ்சில் துமகூரு வழியாக பல்லாரி சென்றுள்ளார். இதையடுத்து, துமகூரிலும், பல்லாரியிலும் நேற்று அதிகாலை முதல், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பல்லாரி பஸ் நிலையத்தில் அவர் சுற்றித் திரிந்த சிசிடிவி வீடியோவும் கிடைத்துள்ளது. பின், பீதரின் ஹும்னாபாத் செல்லும் பஸ்சில் ஏறிய காட்சிகளும் பதிவாகியுள்ளன. அங்கும் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மர்ம நபர் ஹிந்தியில் பேசியதாக பலரும் தகவல் அளித்துஉள்ளனர். இதன் அடிப்படையில், அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

