குழந்தைகள் சமூக வலைதள கணக்கிற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை !:தகவல் பாதுகாப்புச்சட்ட விதியில் கிடுக்கிப்பிடி
குழந்தைகள் சமூக வலைதள கணக்கிற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை !:தகவல் பாதுகாப்புச்சட்ட விதியில் கிடுக்கிப்பிடி
ADDED : ஜன 05, 2025 12:05 AM

மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்னணு தனிப்பட்ட தகவல் பாதுகாப்புச்சட்ட விதிகள் வரைவறிக்கையில், 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளத்தில் கணக்கு துவங்குவதற்கு, அவர்களது பெற்றோரின் ஒப்புதல் தேவை என கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: சைபர் குற்றங்கள், சமூக வலைதள குற்றங்கள், தனித்தகவல்கள் திருட்டு மற்றும் முறைகேடாக பயன்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில், டி.பி.டி.பி., என்ற பெயரில், மின்னணு தனிப்பட்ட தகவல் பாதுகாப்புச் சட்டத்துக்கான விதிகளை மத்திய அரசு வெளியிட்டுஉள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க புதிய விதிகள் இடம்பெற்றுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளத்தில் உறுப்பினராக அல்லது கணக்கு துவங்க, பெற்றோரின் சரிபார்க்கத்தக்க ஒப்புதல் கட்டாயமாகிறது.
ஒப்புதல் தரும் பெற்றோரின் வயது மற்றும் அடையாளங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் குறித்த பதிவுகள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சமூக வலைதள நிர்வாகத்தால் அழிக்கப்பட வேண்டும்.
கூகுள், ஆப்பிள், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில்நுட்ப தளங்கள், தங்கள் பயனரின் உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அரசால் வரையறுக்கப்பட்ட சில தனிப்பட்ட தகவல்கள், இந்தியாவுக்கு வெளியே மாற்றப்படக் கூடாது.
மூன்று ஆண்டுகளில் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களை அழித்துவிட வேண்டும். அழிப்பதற்கு 48 மணி நேரம் முன்னதாக சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தர வேண்டும்.
ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.
இதை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓர் ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவாலும் முடியும்
இதுவரை ஐரோப்பிய தகவல் பாதுகாப்பு விதிகள்தான் உலகம் முழுதும் முன்மாதிரியாக இருந்தன. புதுமைக்கும், பாதுகாப்புக்கும் சமநிலையை பராமரிக்க, இப்போது இந்தியாவின் புதிய விதிகள் உதவும். புதிய விதிகளை உருவாக்க, பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டன. விதிகளை அமல்படுத்த, நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.
-- அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், பா.ஜ.,