அரசியலில் உயர்ந்தாலும் வணிகத்தில் சறுக்கும் மஸ்க்!
அரசியலில் உயர்ந்தாலும் வணிகத்தில் சறுக்கும் மஸ்க்!
ADDED : மார் 10, 2025 06:23 AM

வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், டுவிட்டருடன் நடத்திய போரில் வெற்றி பெற்றுவிட்டாலும்; அவரது பிற வணிகங்களான டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் ஆகியவற்றில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
டுவிட்டர் நிறுவனத்தை 'எக்ஸ்' என பெயர் மாற்றி வெற்றியடைந்தார் மஸ்க். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை அமெரிக்க அரசின் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை பெற்று வருவதால், ஓரளவு சமாளித்து வருகிறார். இருப்பினும், அண்மையில் அது ஏவிய செயற்கைக்கோள் திட்டம் மற்றொரு முறை தோல்வி அடைந்தது. அதேபோல, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தயாரிப்புகள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன.
எனவே, சர்வதேச அளவில் மஸ்க்கின் வர்த்தகங்கள் வெற்றிகளும் தோல்விகளும் கொண்ட கலவையாகவே உள்ளன. பைடன் ஆட்சியின்போதே கோலோச்சிய எலான் மஸ்க்கின் தொழில்கள், அவரது நெருங்கிய நண்பரான டிரம்ப் ஆட்சிக்கு வந்துள்ளதால், மேலும் கொழிக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.
துவக்கத்தில் அவரது டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயர்ந்தாலும், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை 28 சதவீத சரிவை சந்தித்துள்ளன. கடந்த ஓராண்டுக்கு மேலாக டெஸ்லா நிறுவன பங்குகள் 40 சதவீதம் வரை உயர்ந்திருந்த போதிலும், தற்போதைய 28 சதவீத வீழ்ச்சியால், அதன் சந்தை மதிப்பு ௧ லட்சம் கோடி டாலருக்கு கீழிறங்கியது.
பெரும் ஆரவாரத்துடன் சீனாவில் கால் பதித்த டெஸ்லாவுக்கு, அங்கு பெரும் விமர்சனம் காத்திருந்தது. அதோடு, சீன வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை டெஸ்லா நிறைவேற்றத் தவறியதாகவும், ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை எனவும் தெரிகிறது.
மேலும், சீனாவின் கடுமையான கண்காணிப்பு விதிகளும் டெஸ்லாவுக்கு பெரும் சவாலாக உள்ளன. அதோடு டிரம்பின் பதில் வரிவிதிப்பு நடவடிக்கையும் டெஸ்லாவுக்கு தலைவலியாகியுள்ளது.
சீன ஏற்றுமதிக்கு டிரம்ப், 25 பிளஸ் 10 சதவீத வரி விதித்துள்ள நிலையில், சீனா அதே அளவு வரியை அமெரிக்க பொருட்களுக்கும் விதித்துள்ளது. இது டெஸ்லா கார் இறக்குமதியையும் சேர்த்தே பாதிக்கும். மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை சீன நிறுவனம் முறித்துக் கொண்டுள்ளதால், தொலைத்தொடர்பு வணிகத்திலும் மஸ்க் சவாலை எதிர்கொண்டு உள்ளார்.
வெளிநாடுகளில் மட்டுமின்றி, தன் நண்பர் டிரம்பின் ஆட்சியில் அறிவிக்கப்படும் அதிரடி வரி சீர்திருத்தங்களால், சொந்த நாட்டிலும் எலான் மஸ்க்கின் வர்த்தகங்கள் சவாலை எதிர்கொண்டுள்ளன.
மின்சார வாகன தயாரிப்புக்கு ஊக்கத்தொகை நீடிக்கும் நிலையில், பேட்டரி சார்ஜிங் கட்டமைப்புக்கு நிதியை டிரம்ப் நிறுத்தி விட்டார். டெஸ்லாவிடம் இருந்து 40 கோடி டாலருக்கு அரசு துறைகளுக்கு மின்சார வாகனம் வாங்கும் முடிவையும் டிரம்ப் அரசு நிறுத்தி வைத்துள்ளது,
மொத்தத்தில், அரசியலில் அதிரடி காட்டினாலும்; வணிகத்தில் சறுக்கலை சந்தித்து வருகிறார் எலான் மஸ்க் என்பதே இப்போதைய நிதர்சனம். டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயர்ந்தாலும், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை 28 சதவீத சரிவை சந்தித்துள்ளன.