ஒரு கிலோ தங்கம்... போலீஸ் இன்ஸ்.,சுக்கு 'சுங்கம்?' அரசாங்க உத்தரவு மாநகராட்சி அதிகாரிகளால் 'பங்கம்'
ஒரு கிலோ தங்கம்... போலீஸ் இன்ஸ்.,சுக்கு 'சுங்கம்?' அரசாங்க உத்தரவு மாநகராட்சி அதிகாரிகளால் 'பங்கம்'
UPDATED : அக் 22, 2024 08:33 AM
ADDED : அக் 21, 2024 11:46 PM

தீபாவளி பர்ச்சேஸ்க்கு ஸ்கூட்டரில் புறப்பட்ட சித்ராவும், மித்ராவும் உஷாராக மழைக்கோட் அணிந்து கொண்டனர்.
ஸ்கூட்டரின் பின்இருக்கையில் அமர்ந்து கொண்ட மித்ரா, ''நம்மூர் எஸ்.பி., கார்த்திகேயன் பட்டைய கெளப்புறாராமே... போலீஸ் ஆபீசர்ஸ் பலரும் பாராட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேன்...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஸ்டேஷனுக்கு வர்ற கம்ப்ளைன்ட்களை ஒழுக்கமா விசாரிக்கணும்; குட்கா சேல்ஸ் இருக்கவே இருக்கக்கூடாது; மீறி நடந்துச்சுன்னா, ஆக்சன் வேற லெவல்ல இருக்கும்னு ஆய்வு கூட்டத்துல 'வார்னிங்' செஞ்சிருக்காரு. இதை ரெண்டு எஸ்.ஐ.,கள் 'அசால்ட்'டா நினைச்சிட்டு விட்டுட்டாங்களாம். இதுவரைக்கும் குட்கா பிடிக்காம இருந்ததால, வால்பாறை, கிணத்துக்கடவு எஸ்.ஐ.,க்களை ஆயுதப்படைக்கு அனுப்பிட்டாராம். அதனால, ஸ்டேஷன்ல நடக்குற விவகாரங்களை எஸ்.பி., காதுக்கு போகாத அளவுக்கு மூடி மறைக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''
ஆக்சன் எடுப்பாங்களா
''அவருக்குன்னே... தனி டீம் வச்சிருப்பாரே... அந்த டீம் போலீஸ் காரங்க சும்மா இருப்பாங்களா...''
''பார்ப்போம்... அந்த டீம் போலீஸ்காரங்க... எஸ்.பி.,க்கு விசுவாசமா இருக்காங்களா அல்லது ஸ்டேஷன்ல இருக்கறவங்களுக்கு விசுவாசமா இருக்காங்களான்னு போகப் போகத் தெரியும்னு போலீஸ்காரங்க சொல்றாங்க...''
''ஏனாம்... அப்படி சொல்றாங்க...''
''தொண்டாமுத்துார் ஏரியாவுல ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க நடத்துற 'டாஸ்மாக்' பார்கள்ல சட்ட விரோதமா மது விற்பனை ஜோரா நடக்குதாம். போலீஸ்காரங்க ஆய்வுக்குபோனா, ஆளுங்கட்சியில மேலிடத்துல தகவல் போயிடுதாம்; மேலிடத்துல இருந்து போலீஸ்காரங்களை மிரட்டுறாங்களாம். ஆளுங்கட்சிக்காரங்க மேல எந்த நடவடிக்கையும் கட்சி தலைமை எடுக்கறதில்லை. அதனால, உளவுப்பிரிவு போலீஸ்காரங்க 'அப்செட்'டுல இருக்காங்க. தலைமையில இருந்து 'என்கொயரி' செய்யச் சொல்லி ஆர்டர் போடுறாங்க. விசாரிச்சு 'ரிப்போர்ட்' அனுப்புனா... ஆக்சன் இருக்கறதில்லையாம். அதனால, உள்ளூர் லெவல்ல எஸ்.பி.,யாவது ஆக்சன் எடுப்பாரான்னு பார்ப்போம்னு சொல்றாங்க,''
தங்கத்தை அமுக்கிய இன்ஸ்.,
''இன்ஸ்., ஒருத்தரு ஒரு கிலோ தங்கத்தை அமுக்கிட்டாராமே... அவரிடம் ரகசிய 'என்கொயரி' நடக்குறதா சொல்றாங்க... உண்மை தானா...''
''ஆமா... மித்து! நீ கேள்விப்பட்டது கரெக்ட்டு தான்! கோவைக்கே புகழ்பெற்ற தொழிலின் பெயரை அடைமொழியா வச்சிருக்கிற நகைக்கடை உரிமையாளர் ஒருத்தரு, ஆபரணங்கள் செய்றதுக்காக, நகை தயாரிப்பாளர் ஒருத்தரிடம், கொஞ்சம் கொஞ்சமா, எட்டு கிலோ வரை தங்கம் கொடுத்திருக்காரு. அவரோ, ஆபரணம் செஞ்சு கொடுக்காம கம்பி நீட்டிட்டாரு,''
''செல்வமான ஏரியாவுல இருக்கற ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்ததும், இன்ஸ்., நேரடியா விசாரிக்க ஆரம்பிச்சிருக்காரு. கூட்டல் கழித்தல் கணக்குப்போட்டுப் பார்த்த இன்ஸ்., வழக்கு விசாரணையை இழுத்தடிச்சிட்டு இருந்திருக்காரு. ஒரு நாள் அவரிடம் நகை தயாரிப்பாளர் வசமா சிக்கிட்டாரு. அரெஸ்ட் பண்ணி, நகையை மீட்காம, 'டீல்' பேசி, ஒரு கிலோ தங்கத்தை அமுக்கிட்டாராம். அதுக்குப்புறம் கம்ப்ளைன்ட் கொடுத்தவரை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு, 'திருட்டு கேஸ்' போட்டுருவேன்னு மிரட்டியிருக்காரு...''
''உஷாரான நகை கடைக்காரர், சென்னைக்கு போயி, போலீஸ் உயரதிகாரிகளை சந்திச்சு, நடந்ததை சொல்லியிருக்காரு. இப்போ, இன்ஸ்., விசாரணை வளையத்துல இருக்காராம். 'என்கொயரி' முடிஞ்சதும் ஏகப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வரும்னு போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க. இந்த இன்ஸ்., மூணு வருஷமா ஒரே ஸ்டேஷன்ல இருக்காராம்...''
விபத்தில் சிக்கிய எஸ்.ஐ.,
''சிங்காநல்லுார் எஸ்.ஐ., ஒருத்தர் ஆக்ஸிடென்ட்டுல சிக்கிட்டாராமே...''
''ஆமாப்பா... அந்த கூத்தை ஏன் கேக்குறே... அடமானம் வச்ச காரை மீட்குறதுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்றது சம்பந்தமா... போன வாரம் பேசுனோமே... இதுசம்மந்தமா டென்ஷனான எஸ்.ஐ., ஸ்டேஷன்ல இருக்கற போலீஸ்காரங்க கிட்ட கோபமா நடந்துக்கிட்டாராம்.
அப்போ, 'யாரோ ஒருத்தர், ஸ்டேஷன்ல நடக்கறதை வெளியே சொல்றீங்க... அவுங்க டூவீலர்ல போகும்போது ஆக்சிடென்ட் ஆகி, கை, கால் ஒடிஞ்சிடும்'னு சாபம் விட்டாராம். ஒரு மணி நேரத்துல, அவரே ஆக்சிடென்ட்டுல சிக்கிட்டாராம்' என்றபடி, கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஜவுளிக் கடை முன் ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.
கடைக்குள் நுழைந்ததும் பெண்கள் பிரிவுக்குள் சென்ற மித்ரா, இந்தாண்டு பேஷன் டிரஸ்களை தேட ஆரம்பித்தாள்.
ஆர்டரை மதிக்காத கார்ப்பரேஷன்
''மித்து, கவர்மென்ட் ஆர்டரை கார்ப்பரேஷன்ல மதிக்கிறதே இல்லையாமே...''
''ஆமாக்கா... நீ சொல்ற மாதிரி தான் கார்ப்பரேஷன்ல நடக்குது. அசிஸ்டென்ட் டவுன் பிளானிங் ஆபீசர்ஸ் மூணு பேரை வெவ்வேறு சிட்டிக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சு, கவர்மென்ட் ஆர்டர் போட்டிருக்கு. அதுல, ஒருத்தரை மட்டும் விடுவிக்கச் சொல்லியிருக்காங்களாம். மத்த ரெண்டு பேரையும் இன்னும் விடுவிக்கலையாம்... கவர்மென்ட் செகரெட்டரி போட்ட ஒரு உத்தரவை நிறுத்தி வைக்கிற அளவுக்கு 'பவர்புல்' அதிகாரம் யாருக்கு இருக்குன்னு கார்ப்பரேஷன்ல பேசிக்கிறாங்க''
கான்ட்ராக்டர்ஸ் புலம்பல்
''கார்ப்பரேஷன்ல டெண்டர் பஞ்சாயத்து ஓடிட்டு இருக்குதாமே...''
''ஆமாப்பா... அந்த விவகாரம் பூதம் மாதிரி அடிக்கடி கெளம்பிட்டு இருக்கு. கான்ட்ராக்ட் எடுக்க நினைக்கிறவங்க, டிபார்ட்மென்ட்டை சேர்ந்த முக்கியப்புள்ளியை பார்த்து, கமிஷன் கொடுத்துட்டு வர்றாங்களாம். டெண்டர் பைனல் செஞ்சதுக்கு அப்புறம், 'அவிநாசி' ஊர் பெயரை அடையாளமா வச்சிருக்கற ரெண்டெழுத்துக்காரர் தரப்புல இருந்து அழுத்தம் வருதாம்; கமிஷன் கொடுக்கலைனா, வேலை கை மாறி போயிடுதாம். ஒரு வேலைக்கு ரெண்டு இடத்துக்கு கமிஷன் கொடுத்தா எப்டீங்க கட்டுபடியாகும்னு கான்ட்ராக்டர்ஸ் புலம்புறாங்க... கான்ட்ராக்டர் விஷயத்துல சிங்கிள் சிஸ்டம் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறாங்க... ''
ஆளுங்கட்சி அட்ராசிட்டி
''ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, நண்பருக்கு கார்ப்பரேஷன் வேலை எடுத்து கொடுத்துட்டு, ஒர்க்கை முழுமையா செய்யாமலேயே 'பில்' வாங்குறாராமே...'' என்ற மித்ரா, தீபாவளிக்கு தனித்துவமா தெரியணுங்கிறதுக்காக... 'லாங் சைஸ்' குர்தி தேர்வு செய்தாள்,
''இதுமாதிரி... கார்ப்பரேஷன்ல ஏகப்பட்ட விவகாரம் நடக்குதாம். எப்போதும் மஞ்சள் சட்டை போடுற வழக்கமுள்ள ஆளுங்கட்சிக்காரர் ஒருத்தரு, அதிகாரத்தை பயன்படுத்தி, டெண்டர் எடுத்திருக்காராம்; வேலையை செய்யாம இழுத்தடிக்கிறாராம். கமிஷனர் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம இன்ஜினியர்ஸ் புலம்புறாங்க... இதே மாதிரி... ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் அவுங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு டெண்டர் எடுத்து கொடுக்குறாங்க. அப்புறம்... வேலையை முழுசா முடிச்சுக் கொடுக்குறதுக்கு முன்னாடியே... 'பில்' தொகையை கொடுக்கச் சொல்லி நெருக்கடி தர்றாங்களாம்...'' என்றபடி, சேலை பிரிவுக்குள் நுழைந்தாள் சித்ரா.
கவுன்சிலர் மீது கோபம்
''ரெண்டெழுத்து ஆளுங்கட்சி கவுன்சிலர் மேல அபார்ட்மென்ட்டுல குடியிருக்கறவங்க கடுங்கோபத்துல இருக்காங்களாமே...''
''அதுவா... மழை பெஞ்சா... பெர்க்ஸ் ஆர்ச் ஏரியாவுல இருக்கற அபார்ட்மென்ட்டுக்குள்ள தண்ணீ புகுந்துடுச்சு... என்ன நடந்துச்சுன்னு பார்த்தா... வாய்க்கால் ஷட்டரை குளோஸ் பண்ணி வச்சிருந்திருக்காங்க. ஆய்வுக்கு வந்த ஆளுங்கட்சி கவுன்சிலரிடம் ஏரியா பப்ளிக் சொல்லியிருக்காங்க. அதுக்கு, 'இருக்கறதுனா... இருங்க... இல்லேன்னா... வீட்டை காலி பண்ணிட்டு போங்க...'ன்னு அலட்சியமா பதில் சொல்லியிருக்காராம். அதனால, ஆளுங்கட்சி மேல அப்பகுதி மக்கள் கடுப்புல இருக்காங்க,'' என கூறிய சித்ரா, பங்சனுக்கு டக்குனு ரெடியாகுறதுக்கு வசதியா, ரெடிமேடு சேலையை தேர்வு செய்தாள்.
பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த மித்ரா, ''தீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ் விடுறதா போக்குவரத்து கழகத்துல பெருமையா சொல்றாங்க. ஆனா, நம்மூர்ல தெனமும் ஓட வேண்டிய டவுன் பஸ்களை கூட ஒழுக்கமா ஓட்டுறதில்லையாமே...'' என, கேட்டாள்.
''ஆமா... மித்து! கரெக்ட்டு தான்! வடவள்ளியில இருந்து ஒண்டிப்புதுார் வரைக்கும் இயக்குற '1சி' பஸ்சை, நைட் நேரத்துல வசந்தா மில்ஸ் ஸ்டாப்புல 'யூ டேர்ன்' அடிச்சு திரும்பிடுறாங்களாம். அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல அலுவலகத்துல 'கம்ப்ளைன்ட்' செஞ்சாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாம்,''
ஏனோ... தானோ...
''நம்மூர்ல இருக்கற உணவு பாதுகாப்பு பிரிவு ஆபீசர்ஸ் ஏனோ... தானோன்னு செயல்படுறாங்களாமே...''
''அதுவா... உணவு பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவங்க... உணவு கலப்பட விவகாரத்துல மட்டும் மூக்கை நுழைக்கிறாங்களாம். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்றதில்லையாம். கருமத்தம்பட்டி, சூலுார் ஏரியாவுல போலீஸ்காரங்க மட்டும் ரோந்து போயி, குட்கா பறிமுதல் செய்றாங்க. உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுக்கறதே இல்லையாம். இந்த ரெண்டு ஏரியாவுல இருக்கற சில ஹோட்டல்கள் உணவுகளை தரமில்லாம கொடுக்கறது தெரிஞ்சிருந்தும், நடவடிக்கை எடுக்காம இருக்காங்களாம்...'' என்றபடி, ஸ்கூட்டரை ஆன் செய்தாள் சித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை பார்க்க ஆரம்பித்தாள்.