ரூ.40 கோடியை கொட்டி சீரமைத்தும் உள்வாங்கிய சோழவரம் ஏரிக்கரை; தார்ப்பாய் போட்டு பாதுகாக்கும் அவலம்
ரூ.40 கோடியை கொட்டி சீரமைத்தும் உள்வாங்கிய சோழவரம் ஏரிக்கரை; தார்ப்பாய் போட்டு பாதுகாக்கும் அவலம்
ADDED : டிச 12, 2025 06:29 AM

சோழவரம்: சோழவரம் ஏரிக்கரை, 40 கோடி ரூபாயில் சீரமைத்தும், சமீபத்திய மழையில் உள்வாங்கி சேதமடைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முறையாக பணிகளை மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. சோழவரம் ஏரியின் கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, 40 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் துவங்கின.
மொத்தம் 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரிக்கரையில் அதிகம் பாதிப்புள்ள, 1.04 கி.மீ., துாரம் சீரமைப்பு பணிகள் நடந்தன. உள் பகுதி கரையோரம், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவர் அமைத்து, அதிலிருந்து, 30 மீ., சரிவாக, பாறை கற்கள் பதிக்கப்பட்டன.
பணிகள் முடிந்த நிலையில், இந்த ஆண்டு ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, நீர்வளத்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த மாதம் 8, 9ம் தேதிகளில் நீர்மட்டம், 0.79 டி.எம்.சியாக உயர்ந்தபோது, புதிதாக சீரமைக்கப்பட்ட கரைகளில் விரிசல் ஏற்பட்டது. கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்தன.
இதனால், ஏரியில் இருந்து கடந்த மாதம், 11 -17ம் தேதிகளில், பேபிகால்வாய் வழியாக புழல் ஏரிக்கும், கலங்கல் பகுதியில் உள்ள ஷட்டர்கள் வழியாக, கொசஸ்தலை ஆற்றுக்கும், வினாடிக்கு, 250 - 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஏரியின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்தது. கரைகளில் ஏற்பட்டிருந்த விரிசல்களில் ரசாயன கலவையை கொண்டு தற்காலிக, 'பேட்ச்' வேலைகள் நடந்தன.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி முதல் இம்மாதம், 4ம் தேதி வரை பெய்த கனமழையால், ஏரியில் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்தது. அவை உடனுக்குடன் புழல் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆற்றிற்கும் வெளிற்றப்பட்டது.
தற்போது, ஏரியில், 0.53 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. கனமழை காரணமாக, ஏரியின் ஒரு பகுதி கரையில், 100 மீ., துாரம், 5 அடி வரை உள்வாங்கியுள்ளது; அலை தடுப்பு சுவரும் சேதம் அடைந்துள்ளது.
கரைகள் மேலும் சேதமாகாமல் இருக்க, அவற்றின் மீது தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகள் கரை சீரமைப்பு பணிகளுக்காக, ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை இருந்தது. தற்போது, 40 கோடி ரூபாய் செலவிட்டும், அதே நிலை தொடர்கிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சோழவரம் ஏரி கரைகள் சீரமைப்பு பணிகள் தரமாக செய்யாததே இதற்கு காரணம். பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சீரமைப்பு பணிகள் நடந்த இடத்தில், நீரியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கரைகள் உள்வாங்கிய பகுதியில், மண் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில், கரைகள் உள்வாங்கியதற்காக காரணம் கண்டயறிப்படும். பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

