விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு
விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு
UPDATED : டிச 23, 2025 05:28 AM
ADDED : டிச 23, 2025 05:21 AM

சென்னை: த.வெ.க., நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில், முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து, விஜய் பலத்தை காட்டியதால், தி.மு.க., தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகள் 13 சதவீதம் உள்ளன. இவற்றில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் 6 சதவீதம் உள்ளன. ஜெயலலிதா மறைவிற்கு பின், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டுகள், தி.மு.க.,விற்கு முழுமையாக கிடைத்து வருகின்றன.
இதன் காரணமாக, தி.மு.க., கூட்டணி சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.
வரும் சட்டசபை தேர்தலிலும் சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்கவைக்க, தி.மு.க., தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கிறிஸ்துவர் என்பதால், அந்த மதத்தினரின் ஓட்டுகள் கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், த.வெ.க., சார்பில், மாமல்லபுரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில், முக்கிய கிறிஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்த பேராயர்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். பலர் வெளிப்படையாகவே, சட்டசபை தேர்தலில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினர்.
இப்படி விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழா நடந்ததால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தரப்பு, அதற்கு போட்டியாக பாதிரியார்களை அழைத்து வந்து, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில், தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ரூபன் மார்க், சி.எஸ்.ஐ., பாதிரியார் ஹேமசந்திரா, வேலுார், மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

