கோவையில் 'கொள்ளை கூட்டணி!' சமூகவிரோதிகள் + அரசியல்வாதிகள் + போலீஸ்
கோவையில் 'கொள்ளை கூட்டணி!' சமூகவிரோதிகள் + அரசியல்வாதிகள் + போலீஸ்
UPDATED : மார் 11, 2024 06:27 AM
ADDED : மார் 11, 2024 01:39 AM

பணம் சுருட்டல்
'ஏங்க, இன்னைக்கு உங்க சாய்ஸ் என்ன... நல்ல நம்பரா சொல்லுங்க; ஜெயிச்சே ஆகணும்...' என்கின்ற 'மூன்று நம்பர்' லாட்டரி மோக பேச்சுத்தான், கோவையில் பட்டிதொட்டியெங்கும் பரவலாக ஒலிக்கிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பல லட்சம் ரூபாயை சட்டவிரோத லாட்டரி கும்பலிடம் பறிகொடுத்துவிட்டு கதறும் நிலையில், அவர்கள் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில், 2003ல் லாட்டரிக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன்பின், கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து விற்றனர். இதில், 'ரிஸ்க்' அதிகம் என்பதால், நவீன காலத்திற்கேற்ப லாட்டரி விற்பனை உருமாறியுள்ளது. கேரளா, நாகாலாந்து 'டியர்' லாட்டரி குழுக்களின் முடிவுகளை மையமாக வைத்து லாட்டரி விற்பனை கோவையில் தீவிரமாகியுள்ளது.
லாட்டரி ஏஜன்ட்கள், அரசியல்வாதிகள், பணபலம் கொண்டோர் இணைந்து செயல்படுகின்றனர். ஒரு நம்பர், இரண்டு நம்பர், மூன்று நம்பர், நான்கு நம்பருக்கு, ரூ. 12 - 120 வரை விலை வைத்துள்ளனர். இவர்கள், கமிஷன் அடிப்படையில் கோவையின் ஒவ்வொரு பகுதிக்கும் 'மெயின் ஏஜன்ட்'களை நியமித்துள்ளனர்.
கேரளா லாட்டரி முடிவு பிற்பகல் 3:00 மணிக்கும், 'நாகாலாந்து டியர்' லாட்டரி மதியம் 1:00, மாலை 6:00, இரவு 8:00 மணி என, நாளொன்றுக்கு நான்கு முறையும் ஆன்லைனில் குலுக்கல் முடிவு வெளியாகிறது. இம்முடிவுகளின் அடிப்படையில்தான் கோவையில் சட்டவிரோத லாட்டரி விற்பனை நடக்கிறது. மேற்கண்ட இரு மாநிலங்களின் லாட்டரிக்கும், கோவையில் இயங்கும் சட்டவிரோத லாட்டரி கும்பலுக்கும் எவ்வித தொடர்புமில்லை; ஆனால், அதன் 'ரிசல்ட்'தான் இவர்கள் விளையாட்டின் சூட்சுமம்.
அதாவது, கேரளா லாட்டரியில் பரிசு விழப்போகும் எண்களாக, கற்பனையாக கடைசி ஒரு நம்பரையோ, இரண்டு நம்பரையோ அல்லது மூன்று நம்பரையோ கோவையிலிருக்கும் நபர் 'பிளாக்' செய்து, சட்டவிரோத லாட்டரி ஏஜன்ட்டிடம் தெரிவித்துவிடுவார்.
அதற்குண்டான தொகையையும் செலுத்திவிடுவார். அந்த நபர் பிளாக் செய்த நம்பருக்கு பரிசு விழுந்தால், செலுத்திய தொகைக்கு பல மடங்கு தொகை பெறுவார். இல்லாவிடில் செலுத்திய தொகை அம்பேல். ஒரு நபர் எத்தனை எண்களை வேண்டுமானாலும் பிளாக் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். 'மெயின்' ஏஜன்ட்களுக்கு நாளொன்றுக்கு, ஒரு லட்சம் முதல், இரண்டு லட்சம் வரை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க்குக்கு சாய்பாபா காலனியில் தலைமை அலுவலகம் உள்ளதாக கூறப்படுகிறது. வடவள்ளி, தொண்டாமுத்துார், பேரூர் பகுதிகளில் விற்பனை அதிகம் நடப்பதாகவும், வாட்ஸ் ஆப், பேஸ் புக் குழுக்களில் விற்பனை நடப்பதால், தடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும் ஒருசில போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதைத்தடுக்க வேண்டிய பொறுப்பு கோவை போலீஸ் உயரதிகாரிகளுக்கு உண்டு; தடுப்பார்கள் என, நம்புவோம்!

