ராமேஸ்வரம் விமான நிலைய திட்டத்திற்கு மாணிக்கனேரியை பரிந்துரைத்தது ஆணையம்
ராமேஸ்வரம் விமான நிலைய திட்டத்திற்கு மாணிக்கனேரியை பரிந்துரைத்தது ஆணையம்
ADDED : ஜன 31, 2026 08:29 AM

சென்னை: ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, ராம நாதபுரம் மாவட்டத்தில், இரு இடங்களில் ஆய்வு நடந்த நிலையில், 'மாணிக்கனேரியில் விமான நிலையம் அமைக்க, சாதகமான விஷயங்கள் அதிகமாக உள்ளன' என, தமிழக அரசிடம், இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள, ராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களை பார்வையிட, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்கள், மதுரை விமான நிலையம் வந்து, ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் சாலை மார்க்கமாக செல்கின்றனர்.
எனவே, ராமேஸ்வரம் வருவோரின் பயண நேரத்தை குறைக்கவும், அம்மாவட்டத்தில் இருந்து, கடல் உணவு பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ராமேஸ்வரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 2025 பட்ஜெட்டில் வெளியானது.
ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரத்தில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம், களரி, மாணிக்கனேரி ஆகிய ஐந்து இடங்களில் தலா, 500 ஏக்கர் நிலத்தை, மாவட்ட வருவாய் துறையுடன் இணைந்து, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டது.
இதில், மக்கள் தொகை குறைவாக உள்ள, கும்பரம் மற்றும் மாணிக்கனேரி பகுதிகளை தமிழக அரசு தேர்வு செய்தது. அந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்யும்படி, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தை, தமிழக அரசு வலியுறுத்தியது. அந்த இடங்களில், கடந்த ஆண்டு இறுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கையை, தற்போது ஆணையம், தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், 'ராமேஸ்வரம் விமான நிலையத்தை மாணிக்கனேரியில் அமைக்க, சாதகமான அம்சங்கள் உள்ளன. 'அங்கு, ஓ.எல்.எஸ்., எனப்படும் உயரமான கட்டடங்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணிக்கனேரிக்கும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கும் இடையே, 70 கி.மீ., துாரம் உள்ளது.
ராமேஸ்வரத்தில் கடல் அருகில் இருப்பதாலும், நாட்டின் எல்லை பகுதியாக இருப்பதாலும், மாணிக்கனேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பின், மாணிக்கனேரியில் ராமேஸ்வரம் விமான நிலைய திட்டத்திற்கான, அடுத்தகட்ட பணிகளை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.

