ஆய்வு முடிந்த இடங்களில் பயிர் இழப்பீடு தொகை கொடுக்காமல் 'கறார்' காட்டும் நிறுவனங்கள்
ஆய்வு முடிந்த இடங்களில் பயிர் இழப்பீடு தொகை கொடுக்காமல் 'கறார்' காட்டும் நிறுவனங்கள்
UPDATED : பிப் 13, 2025 04:03 AM
ADDED : பிப் 13, 2025 12:33 AM

சென்னை:முன்கூட்டியே பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு தர, காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. அரசு தரப்பில் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.
மத்திய - மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, 32 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, 14 லட்சம் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
சம்பா பயிர்களுக்கு மட்டும், 19 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு 8 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார்.
திருப்பத்துார், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய 24 மாவட்ட பயிர்கள், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டன.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி நடந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், பயிர் இழப்பீடு வழங்கவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக, சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில், 39,832 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 22,868 பரிசோதனைகள் முடிக்கப்பட்டு உள்ளன. எஞ்சிய இடங்களில் பயிர் அறுவடை ஆய்வை முடிக்கும் பணி தாமதம் ஆகி வருகிறது. இதனால், அடுத்த போக சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பயிர் அறுவடை ஆய்வு முடிந்த இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு, பிப்ரவரி மாதம் இழப்பீடு வழங்க வேண்டும். எஞ்சிய இடங்களில் ஆய்வை முடித்து, மார்ச் மாதத்திற்குள் முழுமையான இழப்பீடு வழங்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, வேளாண்துறை விரும்புகிறது.
ஆனால், பயிர் அறுவடை ஆய்வு முடித்து, அதன் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து, ஒப்புதல் பெற்று, அதன்பிறகே, இழப்பீட்டு தொகையை விவசாயிகளின் வங்கி கணக்குகளில், விடுவிக்க முடியும் என, சில காப்பீட்டு நிறுவனங்கள் கறாராக கூறி வருகின்றன. இதனால், பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, மூன்று கட்ட ஆலோசனை நடந்துள்ள நிலையில், மீண்டும் காப்பீட்டு நிறுவன உயர் அதிகாரிகளை அழைத்து பேச, வேளாண்துறை தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

