திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நீதிபதி குறித்து சர்ச்சை பேச்சு; மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது புகார்
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நீதிபதி குறித்து சர்ச்சை பேச்சு; மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது புகார்
ADDED : மார் 19, 2025 04:32 AM

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலை களங்கப்படுத்தும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஓய்ந்திருக்கும் நிலையில், மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம், மாநாடு நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.
அவ நம்பிக்கை
மனுவை விசாரித்த நீதிபதி தனபால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹாலில் மார்ச் 9ல் உள்ளரங்க மாநாடாக நடத்த அனுமதிக்கப்பட்டது.
இதில், வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:
மலை விவகாரத்தில் உனக்கு தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்துவிட்டு, நாளை ஓய்வு பெற்ற பிறகு, ஒரு மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை, நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்.
தீயை பற்ற வைப்பவனும், தீயை அணைப்பவனும் ஒன்று என்று சொன்னால், உன்னை போல் முட்டாள் இந்த உலகில் இல்லை. எந்த துறை என்றாலும், எந்த உயரிய பதவியில் இருந்தாலும், எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன்தான். இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்த செய்திகளின் அடிப்படையில், மதுரை வழக்கறிஞர் முருக கணேசன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அதில், 'இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பு சாசன சட்டத்தை பாதுகாத்து வரும் பாதுகாவலராக இருந்து வரும் நீதிபதியை அவமதிக்கும் வகையிலும், மக்களின் நம்பிக்கையான நீதிமன்ற தீர்ப்பின் மீது அவநம்பிக்கையை உண்டாக்கும் வகையிலும் மக்கள் பிரதிநிதியான வெங்கடேசன் பேசியுள்ளார்.
கண்ணியமிக்க நீதிபதி வழங்கிய தீர்ப்பினை, சுயஆதாயம் பெறும் குற்றமுறு உள்நோக்கத்தோடு வழங்கியுள்ளதாக பேசிஉள்ளார். நீதிமன்றத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் அசிங்கம், அயோக்கியன் என்ற தரக்குறைவான வார்த்தைகளாலும், நீதிபதியையும், அவர் வழங்கிய தீர்ப்பையும் ஒருமையில் அவமதிக்கும் வகையிலும் விளம்பர பிரியராக பேசியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மக்கள் பிரதிநிதியாக உள்ள நபர் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் மோசமாக சித்தரித்து பொது வெளியில் எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லாமல் சுய ஆதாயத்திற்காக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதாக பேசியது, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகமான பழிச்சாட்டுதலாகும்.
சட்ட திட்டங்களை மதித்து நீதிமன்றங்களுக்கு கீழ்படிந்து வரும் நபர் என்பதையும் பொருட்படுத்தாமல் சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.