இ.கம்யூ., கட்சிக்குள் திமுக குழப்பம் ஏற்படுத்துவதாக புகார்
இ.கம்யூ., கட்சிக்குள் திமுக குழப்பம் ஏற்படுத்துவதாக புகார்
ADDED : ஜூலை 15, 2026 05:32 AM

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள், தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அணி மாறி ஆதரவு அளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அமைச்சரவையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறாவிட்டாலும், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்து விட்டன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இ.கம்யூ., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்தாலும், தி.மு.க.,வுக்கு ஆதரவாக இ.கம்யூ., முன்னாள் மாநில செயலர் முத்தரசன், சுப்பராயன் எம்.பி., பேசி வருகின்றனர். அவர்களை வைத்து, கட்சியில் குழப்பத்தை, தி.மு.க., உருவாக்கி வருகிறது.
தஞ்சாவூரில், ஒரு திருமண விழாவில் பேசிய முத்தரசன், 'ஸ்டாலின் அன்று போல் இன்றும் சோர்வின்றி இயங்குகிறார். தி.மு.க.,வோடு நட்புடன் பேச்சு தொடரும்' என்றார்.
இதுபோல, கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது, 'அதிகார துஷ்பிரயோகம்' என சுப்பராயன் விமர்சித்துள்ளார்.
இ.கம்யூ., கட்டுப்பாட்டு குழு தலைவராக இருக்கும் சுப்பராயன், நீதிபதி போல் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால், கட்சியில் குழப்பத்தை உருவாக்கும் வகையில், கருத்துகளை கூறுகிறார்; இதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
