UPDATED : டிச 20, 2025 11:53 AM
ADDED : டிச 20, 2025 05:49 AM

திருப்பூர்: ''திருப்பூர் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, மா.கம்யூ., - இந்திய கம்யூ., இணைந்து டிச., 29ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் கூறினார்.
திருப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு, போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். குப்பை கொட்ட வேண்டாமென, இடுவாய் பகுதி மக்கள் போராடுகின்றனர்; போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. எதிர்ப்பு தெரிவிப்பது முற்றிலும் நியாயமானது. எதிர்த்து போராடிய, 14 நபர்களை கைது செய்து, கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்; 14 நபர்களையும் விடுதலை செய்வதுடன், மேல் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
'மன்னிப்பு வீடியோ வெளியிட்டால் குப்பை கொட்ட மாட்டோம்' என்று மிரட்டி, மேயர் வீடியோ வெளியிட செய்தது உண்மையாக இருந்தால், கம்யூ., கட்சி அதை ஏற்காது. இருப்பினும், தனி நபர் மீது தரக்குறைவாக விமர்சனம் செய்வதையும் நாங்கள் ஏற்க மாட்டோம். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகே, வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பா.ஜ.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க, பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம். அதுவே எங்கள் பிரதான கடமை; அதை ஒட்டித்தான் நிலைப்பாடு இருக்கும்.
அரசியல் ரீதியான எங்கள் போராட்டத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் தான், உள்ளூர் போராட்ட யுத்திகளை வகுப்போம். பலரும், குப்பை பிரச்னையை அரசியலாக்கி வருவதால், இனியும் தாமதம் செய்யாமல், நிரந்தர தீர்வை வலியுறுத்தி, நாங்களும் போராடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் மாநகராட்சி குப்பை விவகாரம் கொழுந்துவிட்டு எரியும் நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்த நிலையில், ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் அடக்கி வாசித்தனர்.
இது போன்ற பிரச்னைகளில், முதல் ஆளாக போராட வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் நெருங்கும் நிலையில், மக்கள் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, வேறு வழியின்றி இவ்வளவு தாமதமாக போராட்டம் அறிவித்துள்ளனர் என்கின்றனர் உள்ளூர் மக்கள். இதற்கிடையே, திருப்பூரில் நேற்று முன்தினம் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 612 பேர் மீது மூன்று பிரிவுகளில், திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.

