முடிந்த வழக்குகளுக்கு உயிர் கொடுத்த வாக்குமூலம்: '10 கொலைகளை செய்தோம்' என்கின்றனர் கொடூரர்கள்
முடிந்த வழக்குகளுக்கு உயிர் கொடுத்த வாக்குமூலம்: '10 கொலைகளை செய்தோம்' என்கின்றனர் கொடூரர்கள்
UPDATED : மே 29, 2025 04:15 PM
ADDED : மே 29, 2025 12:47 AM

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவர், ஒன்பது ஆண்டுகளாக, 19 கொலைகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இவர்கள் செய்ததாக சொல்லும் பல கொலைகளில், ஏற்கனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதால், அவர்கள் போலிகளா என்ற கேள்வி எழுகிறது. இந்த வழக்குகளை முறையாக விசாரிக்காமல், இழுத்து மூடிய அதிகாரிகளுக்கு, அடுத்தடுத்து பெரிய சிக்கல் காத்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ராக்கியப்பன், 72 - பாக்கியம், 63 தம்பதியை, ஏப்., 28ம் தேதி அடித்துக் கொன்று, 10.5 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பினர். இதுதொடர்பாக, அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், 48, மாதேஸ்வரன், 52, ரமேஷ், 54 மற்றும் திருட்டு நகையை வாங்கிய ஞானசேகரன், 48 என, நான்கு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2024 நவ., 28ல் திருப்பூர் மாவட்டம், பல்லடம், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் இருந்த தெய்வசிகாமணி, 78, அவரது மனைவி அலமேலு, 75 தம்பதியரின் மகன் செந்தில்குமார் ஆகியோரையும், இந்த கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.
9 ஆண்டு; 19 கொலை
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2015ல் அறச்சலுாரில் நடந்த திருட்டு வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின் வெளியே வந்து, அவ்வப்போது கொலைகளை அரங்கேற்றி, நகை, பணத்தை திருடியுள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, கையில் கிளவுஸ் அணிவது, காலணி அணியாமல், அமாவாசையையொட்டி உள்ள நாட்களை தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டையொட்டி நீரோடை உள்ளதை பார்த்து கைவரிசை காட்டியுள்ளனர்.
வெவ்வேறு, 12 சம்பவங்களில், 19 கொலைகள் வரை ஒன்பது ஆண்டுகளாக அரங்கேற்றி போலீசாரிடம் சிக்காமல் இருந்த மூன்று பேரும், தற்போது சிவகிரி கொலையில், 'சிசிடிவி' மற்றும் கால் தடயம் வாயிலாக சிக்கினர்.
2022ல் சென்னிமலையில் முதிய தம்பதி, 2023ல் ஒட்டன்குட்டையில் முதிய தம்பதி கொலையையும், தாங்கள் தான் செய்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என, 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையடித்த நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்படியென்றால், யார் நிஜமான குற்றவாளிகள் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 பேரும் குற்றமற்றவர்கள் ஆகின்றனர். உண்மையான குற்றவாளிகளை, 2022க்கு முன்பாக கைது செய்திருந்தால், அடுத்தடுத்து ஆதாயத்துக்காக நடந்த கொலைகளை தடுத்திருக்கலாம்.
இந்த வழக்குகளை பொறுத்த வரை, ஏற்கனவே நடந்த கொலைகளுக்காக, 11 பேரை கைது செய்த டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், தவறான நபர்களை கைது செய்திருந்தால், அவருக்கான தண்டனை என்ன என்ற கேள்வி எழுகிறது. இதில் முக்கியமான ஒரு விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும்.
ஒரு கொலையில், இருவேறு தரப்பினர் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வழக்குகள் நடக்கும் போது, இந்த முரண்பாட்டை தங்களுக்கு சாதகமான வாதமாக கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் வைத்தால், சந்தேகம் மற்றும் குழப்பத்தையே, குற்றம் சாட்டப்பட்டோருக்கு சாதகமாக கோர்ட்டு எடுத்துக் கொள்ளும்.
குற்றம்சாட்டப்பட்டோருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கும். ஆக, குற்றம்சாட்டப்பட்டோர் தண்டனையில் இருந்து எளிதில் தப்புவதோடு, நியாயம் வெளிவராமல் போய்விடும். சில ஆண்டுகளில் ஆதாயத்துக்காக நடந்த முதியோர் கொலைகளில் பல்லடம் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த கொலையையும் தாங்கள் தான் செய்தோம் என, ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் ஒப்புக் கொண்டிருப்பதால், அவர்களை கோர்ட்டில் ஒப்படைக்கும் முன், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் விசாரித்திருக்க வேண்டும். லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., விசாரணை என, இருவேறு கோணங்களில் கொலைகளில் விசாரணை நடக்கும்போது, அதில் ஏற்படும் முரண்களை சுட்டிக்காட்டியும், மொத்த வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டோர் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது.
இதே மாதிரியான குழப்பம் நிறைந்த வழக்கு விசாரணைகள், தமிழக போலீசில் ஏற்கனவே நடந்திருக்கிறது. ஹிந்து அமைப்பை சேர்ந்த வேலுார் மருத்துவர் அரவிந்த் ரெட்டி, கடந்த 2012ல் கொல்லப்பட்டார். வழக்கை விசாரித்த வேலுார் போலீசார், உதயகுமார், தங்கராஜ், சின்னா, ராஜ்குமார், பெருமாள், தரணி குமார் என்ற ஆறு பேரை கைது செய்தனர். அவர்களும், தாங்கள் தான் கொலை செய்தோம் என, போலீசில் வாக்குமூலம் அளித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
இயற்கை மரணம்
பின்னர், மத பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது உள்ளிட்ட பல கொலைகளை செய்திருக்கிறோம் என, வாக்குமூலம் அளித்தனர். இதை அறிந்ததும், அப்போதைய டி.ஜி.பி.,யான ராமானுஜம் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, முன்னதாக போலியான குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, கோர்ட்டுக்கும் இந்த விபரங்களை தெரியப்படுத்தி, போலியானவர்களுக்கு ஜாமின் வழங்க ஏற்பாடு செய்தார். தற்போது, பிலால் மாலிக் மற்றும் போலீஸ் பக்ருதீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அரவிந்த் ரெட்டி வழக்கு நடந்து வருகிறது. அதனால், சென்னிமலை -- சிவகிரி போன்ற இடங்களில் ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட முதியோர் கொலை வழக்குகளில், சரியான முறையில் போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
போலியான குற்றவாளிகளை வழக்குகளில் இருந்து விடுவிப்பதோடு, உண்மையான குற்றவாளிகள், தண்டனையில் இருந்து தப்பிவிடாத அளவுக்கு வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். சிவகிரி, சென்னிமலையில் நடந்த கொலை வழக்குகள் தவிர, ஈரோடு மாவட்டத்தில், முதியவர்கள் சிலர் திடீரென இறந்துள்ளனர். அது இயற்கையான மரணம் என்று கருதி, குடும்பத்தினர் புகார் கொடுக்கவில்லை.
கொலை செய்யப்பட்டு தான் இறந்துள்ளனர் என, சிவகிரி வழக்கில் பிடிபட்டிருக்கும் கொலையாளிகள் தெரிவித்திருக்கும் தகவல்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். கடைசியாக பிடிபட்ட ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலம், தமிழகத்தின் மேற்கு மாவட்ட கொலைகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் குழு -