ADDED : ஜன 14, 2024 12:38 AM

அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம், வரும் 22ல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்குமாறு நாடு முழுக்க மக்களுக்கு அட்சதையுடன் பா.ஜ.,வினர் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்; அரசியல் கட்சிகள், பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முடியாது; இதை பா.ஜ., அரசியலாக்குகிறது' என, காங்கிரஸ் அறிவித்து விட்டது. இதை மனதில் வைத்து, தற்போது, 'சனாதனத்திற்கு எதிரானது காங்கிரஸ்' என, பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர், பா.ஜ.,வினர்.
காங்கிரசின் ராமர் கோவில் நிலைப்பாடு, கட்சிக்குள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளதாக, சீனியர் காங்., தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 'வட மாநிலங்களில் ராமர் கோவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வட மாநிலங்களில் காங்., வெற்றி பெறுவது கடினம்' என்கின்றனர்.
'இது மக்களின் நம்பிக்கை குறித்த விஷயம். இதில் நம் தலைவர்கள் தவறான முடிவெடுத்து விட்டனர்' என, குமுறுகின்றனர் காங்., மாவட்ட தலைவர்களும், தொண்டர்களும்.
மேலும், 'உ.பி., மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே காங்., பரிதாப நிலையில் உள்ளது.
தற்போது, ராமர் கோவிலும் சேர்ந்து காங்கிரசை சுத்தமாக ஒழித்து விடும்' என, அஞ்சுகின்றனர் இரண்டாம் கட்ட காங்., தலைவர்கள்.
உ.பி.,யில் 80 எம்.பி., தொகுதிகள் உள்ளன; இங்கு தான் அயோத்தி உள்ளது. பா.ஜ., தன் தேர்தல் வாக்குறுதியின்படி, ராமர் கோவிலைக் கட்டிவிட்டதால், காங்கிரசுக்கு அதோ கதி தான் என கவலைப்படுகின்றனர்.
'ஓட்டு கேட்க போகும் போது, மக்கள் ராமர் கோவில் குறித்து கேட்டால் என்ன பதில் சொல்வது' எனவும், காங்கிரசார் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் வேறு ஒரு செய்தியும் அடிபடுகிறது... -சில சீனியர் காங்., தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவர் எனவும் கூறப்படுகிறது.

