ADDED : ஜூலை 07, 2025 01:08 AM

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பொருந்தா கூட்டணியாகவே உள்ளது. இப்போதிருக்கும் சூழலில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதானதாக தெரியவில்லை.
பொருந்தா கூட்டணியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்வதும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்வதும் நேர் முரணாக இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என திரும்ப திரும்ப சொல்கிறார். ஆனால், அதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் இருந்து உறுதியான எந்த தகவலும் கிடையாது.
தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என கூறி வருகிறார். அப்படியென்றால், கூட்டணி ஆட்சி கிடையாது என்பதுதான் அர்த்தம்.
அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பா.ஜ., கோஷத்தை அ.தி.மு.க., ஏற்க தயாரில்லை. ஆனால், வெளிப்படையாக தெரிவிக்க, அ.தி.மு.க.,வுக்கு தைரியம் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி என, அமித் ஷா திரும்ப திரும்ப சொல்லும்போது, இங்கு அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி என்பது போய் விடுகிறது. அதிலும் ஒரு குழப்பம் உள்ளது.
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் முடிவெடுப்பர் என்றும் பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.
அப்படியென்றால், முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தன்னை தானே அறிவித்துக் கொள்வதால் என்ன பிரயோஜனம். இப்படி குழப்பம் மேல் குழப்பத்தில் தவிக்கும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தான், தமிழகத்தில் வெற்றி பெறப் போகிறதா?
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -