காங்., தலைவர் மர்மச்சாவு வழக்கு: தேர்தல் முடிவு வரை இழுத்தடிப்பு?
காங்., தலைவர் மர்மச்சாவு வழக்கு: தேர்தல் முடிவு வரை இழுத்தடிப்பு?
ADDED : மே 28, 2024 04:28 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் 58, இறப்பு வழக்கின் விசாரணை முடிவுகளை பார்லி., தேர்தல் முடிவு வரை வெளியிடாமல் இழுத்தடிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜெயக்குமார் மே 2 காணாமல் போனார். மே 4 ல் அவரது வீட்டுத் தோட்டத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படைகள் விசாரித்தும் துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., முத்தரசி திருநெல்வேலியில் விசாரித்து வருகிறார்.
ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் ஜெப்ரின், மார்ட்டின், மகள் கேத்ரின் ஆகியோரை திருநெல்வேலியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜெயக்குமார் இறப்பதற்கு முன் எழுதிய 2 கடிதங்களில் குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.பி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆனந்தராஜா, டாக்டர் செல்வகுமார், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படுகின்றனர். ஒரு நாளில் இருவர் வீதம் விசாரணை நடக்கிறது.
அரசியல் நெருக்கடி
தமிழக அரசியலில் காங்கிரஸ் உடன் மோதலோ சர்ச்சையோ ஏற்படாமல் தவிர்க்க தி.மு.க., விரும்புகிறது. தேர்தல் முடிவுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வரை இத்தகைய சர்ச்சைகளில் சிக்கக் கூடாது என்ற முடிவிலும் உள்ளனர்.
ஜெயக்குமார் தற்கொலை என வழக்கை முடிவு செய்தால் பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கொலைக்கான தடயங்கள் இருப்பதாக பிரச்னை ஏற்படுத்தலாம். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார் என முடிவு செய்தால் யாரை கைது செய்வது என்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
ஜெயக்குமார் இறப்பை பொறுத்தவரையில் அவரது குடும்பத்தினரோ, காங்கிரஸ் கட்சியினரோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே ஜெயக்குமார் இறப்பால் தி.மு.க., காங்கிரஸ் உறவுக்கு பாதிப்பு வராமல் தவிர்ப்பதற்காக சி.பி.சி.ஐ.டி., விசாரணையை தேர்தல் முடிவு வரையிலும் அறிவிக்காமல் கிடப்பில் போட திட்டமிட்டுள்ளனர்.