காங்., வேட்பாளர் பட்டியல் தயார்! பழைய தலைகளுக்கு வாய்ப்பு?
காங்., வேட்பாளர் பட்டியல் தயார்! பழைய தலைகளுக்கு வாய்ப்பு?
UPDATED : மார் 06, 2024 04:18 AM
ADDED : மார் 06, 2024 02:06 AM

பா .ஜ.,வை போல, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. 'சிட்டிங்' எம்.பி.,க்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது .
லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக் கப்படவில்லை. இருப்பினும், இவர்தான் போட்டியிடப்போகிறார் என உறுதியாக முடிவாகிவிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை, முன்கூட்டியே அறிவித்தால் என்ன என்ற சிந்தனை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்துள்ளது.
நடைமுறை
இதன்படி, 34 மத்திய அமைச்சர்கள் உட்பட, 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் பா.ஜ., தலைமை அறிவித்தது.
'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் சில தொகுதிகளுக்கான, தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை துவக்கி விட்டன.
காங்கிரசும் இதே பாணியில் வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவிக்கத் தயாராகி விட்டது. வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வதற்கு காங்கிரசில் நடைமுறை உள்ளது.
காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு, மாநில தலைவர்களின் சார்பில் வேட்பாளர் பெயர்கள் பரிந்துரைக்கப்படும்.
இவற்றிலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாராகி, அது மேலிடத்தின் பார்வைக்கு வைக்கப்படும்.
அவற்றிலிருந்து தேர்வு செய்யப்படும் பெயர்கள் தான், வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும்.
வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட இறுதிக்கட்ட பேனலை தயார் செய்யும், அந்த மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று நடக்கிறது.
கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து வேட்பாளர் பரிந்துரை பட்டியல் டில்லிக்கு வந்து சேர்ந்து விட்டது. இந்த பட்டியல் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படஉள்ளது. இம்மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு பெரிய அளவில் பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று, தெரிகிறது.
இதனால் இந்த பெயர்கள் முதற்கட்டமாக அறிவிக்கப்படவுள்ளன.
வாய்ப்பு
தற்போதைய சிட்டிங் எம்.பி.,க்களாக இருப்பவர்களில், 90 சதவீதம் பேர் வரை நீக்காமல், மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பு தரலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது.அதில், சிட்டிங் எம்.பி.,க்கள் என, 50 க்கும் மேற்பட்டோர்களது பெயர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

