டில்லியில் மார்ச் 27ல் காங்., ஆலோசனை கூட்டம்: தமிழக மா.த.,க்கள் புறக்கணிக்க திட்டம்
டில்லியில் மார்ச் 27ல் காங்., ஆலோசனை கூட்டம்: தமிழக மா.த.,க்கள் புறக்கணிக்க திட்டம்
ADDED : மார் 20, 2025 06:25 AM

மதுரை: டில்லியில் அகில இந்திய காங். சார்பில் மார்ச் 27 ல் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தை தமிழக மாவட்ட தலைவர்கள் (மா.த.,) பலர் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழக காங்., தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்றது முதல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக, தற்போதைய மாவட்ட தலைவர்கள் பதவியில் இருக்கும் போதே அப்பதவிகளுக்கு விருப்ப விண்ணப்பம் அளிக்கலாம் என அவர் வெளியிட்ட அறிவிப்பு மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போதுள்ள பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்களான அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள். இதனால் மாநிலம் முழுவதும் தனக்கான ஒரு மாவட்ட தலைவர்கள் ஆதரவு வட்டம் ஏற்படுத்த செல்வப்பெருந்தகை மறைமுகமாக காய் நகர்த்துகிறார்.
அவரது முயற்சிக்கு முன்னாள் தலைவர்கள் 'செக்' வைத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக தான் அண்மையில் 25 மாவட்ட தலைவர்கள் டில்லி சென்று செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என போர்க்கொடி துாக்கினர்.
இந்நிலையில் தமிழகத்தில் மாவட்ட தலைவர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அகில இந்திய தலைமைக்கு உணர்த்தும் வகையில், செல்வப்பெருந்தகையின் மறைமுக ஏற்பாட்டில் தான் இந்த டில்லி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மூத்த நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் தீவிர ஆதரவாளர். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி கார்கே தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
கார்கே தலைமை வகிப்பதால் அனைத்து மாவட்ட தலைவர்களும் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்பது செல்வப்பெருந்தகையின் திட்டம். ஆனால் இக்கூட்டத்தை பலர் புறக்கணித்து, செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி உள்ளது என்பதை நிரூபிக்க முன்னாள் தலைவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. எனவே அவரவர் ஆதரவு மாவட்ட தலைவர்களுக்கு இதுவரை டில்லி செல்ல 'கிரீன் சிக்னல்' கொடுக்கவில்லை. இதனால் பலர் டில்லி கூட்டத்தை புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.