இந்திரா பவன்.. 47 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசுக்கு சொந்த கட்டடம்: பா.ஜ., பாணியில் காங்.,
இந்திரா பவன்.. 47 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசுக்கு சொந்த கட்டடம்: பா.ஜ., பாணியில் காங்.,
UPDATED : ஜன 16, 2025 04:27 AM
ADDED : ஜன 16, 2025 01:55 AM

டில்லியில், 15 ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பிரமாண்ட புதிய தலைமை அலுவலகக் கட்டடத்தை சோனியா திறந்து வைத்தார். 47 ஆண்டுகளுக்கு பின் சொந்த கட்டடத்தில் காங்கிரஸ் குடியேறியுள்ளது.
கடந்த, 1978 முதல் டில்லி அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்தில் காங்கிரஸ் இயங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் அலுவலகம் கட்டுவதற்கு என நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தீனதயாள் உபாத்யா சாலையில் காங்கிரசுக்கு இடம் கிடைத்தது.
கடந்த 2009ல், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். பா.ஜ.,வின் முன்னோடியும், ஜனசங்க தலைவருமான தீனதயாள் உபாத்யாவின் பெயரை தவிர்க்க முடிவு செய்து, அதையொட்டி அமைந்துள்ள கோட்லா சாலை பக்கம் நுழைவாயில் இருக்கும்படி வைத்து கட்டுமானப் பணிகள் மளமளவென துவங்கின.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது, தொடர் தோல்விகள், கட்சியின் பொருளாளர் அகமது படேலின் திடீர் மறைவு, பணப்பற்றாக்குறை, கொரோனா காலம் என பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் ஒருவழியாக சமாளித்து கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
![]() |
![]() |
- நமது டில்லி நிருபர் -



