காங்., குடியரசு தின பொதுக்கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பால் சலசலப்பு
காங்., குடியரசு தின பொதுக்கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பால் சலசலப்பு
ADDED : ஜன 28, 2025 05:04 AM

மதுரை : தமிழக காங்., முதன்முறையாக நடத்திய குடியரசு தினவிழா பொதுக்கூட்டத்தை தி.மு.க., புறக்கணித்தது.
குடியரசு, சுதந்திர தின நிகழ்வுகளை சென்னையில் மட்டும் நடத்தாமல் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடத்த மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முடிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக முதல் நிகழ்வாக குடியரசு தினவிழா பொதுக்கூட்டம் ஜன., 26ல் மதுரையில் நடந்தது.
இது முதற்கூட்டம் என்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ராஜா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், ராஜா வருகை ரத்து செய்யப்பட்டது.
இதேபோல ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் புறக்கணித்தனர். காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
இதுகுறித்து காங்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தேர்தல் நெருங்குவதால் சென்னையைத் தாண்டி, பிற மாவட்டங்களில் காங்கிரசை பலப்படுத்தும் பணியில் மாநில தலைவர் இந்த முயற்சியை எடுத்துள்ளார். ஆனால் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. காரணம் தெரியவில்லை.
தி.மு.க., நிகழ்ச்சிகளில் கூட்டணி தர்மத்தை மதித்து தொடர்ந்து காங்., தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், மதுரை காங்., பொதுக்கூட்டத்தில், தி.மு.க., நகர் செயலர் தளபதி உள்ளிட்ட நிர்வாகிகள்கூட பங்கேற்கவில்லை. இதனால், அடுத்தடுத்த கூட்டங்களில் தி.மு.க.,விற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாநில தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

