டில்லியில் நடந்த காங்., சிறப்பு கூட்டம்: மாநில தலைவர்கள் பேச முடியாதது ஏன்?
டில்லியில் நடந்த காங்., சிறப்பு கூட்டம்: மாநில தலைவர்கள் பேச முடியாதது ஏன்?
ADDED : நவ 20, 2025 12:45 AM

வா க்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்கும் மாநிலங்களின் காங்., தலைவர்களுடன், கட்சி, மேலிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவர்களை பேச அனுமதி அளிக்காதது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, ம.பி., - உ.பி., உட்பட 12 மாநிலங்களில், கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு, எஸ்.ஐ.ஆர்., பணியே காரணம் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
அடுத்த ஆண்டு, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கெல்லாம் எஸ்.ஐ.ஆர்., பணி மற்றும் பூத் கமிட்டி முகவர்கள், உறுப்பினர்கள் நியமனம் சரியாக நடந்து உள்ளதா என ஆலோசிக்க, டில்லி காங்கிரஸ் மேலிடம் விரும்பியது.
எனவே, 12 மாநில காங்., தலைவர்கள், சட்டசபை காங்., தலைவர்கள், மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில், நடந்தது குறித்து தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
காலை 11:30 மணிக்கு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12:30 மணிக்கு துவங்கியது; ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விட்டது. பெரும்பாலான மாநிலத் தலைவர்களை பேச அனுமதிக்கவில்லை. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் கார்கே போன்றோர் பேசவில்லை.
பீஹாரில், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து, நீதிமன்றம் ஆதாரம் கேட்டது.
'இண்டி' கூட்டணியில், பீஹார் காங்கிரசை தவிர, மற்ற கட்சிகள் ஆதாரங்களை வழங்கின.
இதற்கான காரணம் குறித்து கூட்டத்தில் கே.சி.வேணுகோபாலும், முகுல் வாஸ்னிக்கும் பேசினர்.
அப்போது, 'பீஹாரில் காங்கிரசுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை' என தெரிவித்தனர். இந்த காரணங்கள் ஏற்கக் கூடியதாக இல்லை என்ற முணுமுணுப்பு கூட்டத்தில் கிளம்பியது.
பின், எந்தந்த மாநிலங்களில், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கோவா மாநிலத்தில், பூத் கமிட்டி முறையாக நியமிக்கப்படவில்லை என, அம்மாநிலத் தலைவரை கூட்டத்தில் கண்டித்தனர்.
தமிழகம் குறித்து கேட்டபோது, 24,000 பேர் நியமிக்கப்பட்டதாக தெரிவித்ததும், இன்னும் பணியை வேகப்படுத்துங்கள் என, டில்லி தலைவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, ராஜேஷ்குமார் ஆகியோர் திருப்தி அடைந்தனர். நம்மை ஏதும் கேட்டு தர்ம சங்கடப்படுத்தாமல் விட்டனரே என்பதற்கான திருப்தி தான் அது.
ஆனால், கூட்டத்தில் அனைத்து மாநில காங்., தலைவர்களையும் பேச அனுமதிக்காதது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில், மாநிலத் தலைவர்களை பேச விட்டால், பீஹார் தோல்விக்கு காரணம் குறித்த உண்மைகளை பேசிவிடக்கூடும் என்பதால், கட்சி தலைமையிலிருந்து கூட்டத்துக்கு வந்தோர் லாவகமாக, அதை தவிர்த்து விட்டனர்.
இப்படி, எல்லாரையும் நேரில் வரவழைத்து கூட்டம் நடத்தி, யாரையும் பேச விடாமல் திருப்பி அனுப்பியதற்கு பதில், 'கூட்டத்தை 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவே நடத்தி இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

