சித்தராமையா, சிவகுமார் இடையே சிக்கி தவிக்கும் காங்., மேலிடம்
சித்தராமையா, சிவகுமார் இடையே சிக்கி தவிக்கும் காங்., மேலிடம்
ADDED : ஜன 17, 2024 12:02 AM

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், தற்போது லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஈடுபட்டுள்ளது. மாநில காங்., தலைவர் சிவகுமார், தலைவர்கள், அமைச்சர்களுடன் இணைந்து, தேர்தலுக்கு தயாராகிறார். மற்றொரு பக்கம் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டில்லியில் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை டில்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்துகின்றனர். வேட்பாளர்கள் குறித்து கருத்து கேட்கின்றனர். லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளை கைப்பற்ற, காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது. ஆனால் மேலிடத்தின் உற்சாகத்துக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் பனிப்போர் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யின் நோட்டீஸ், வரும் நாட்களில் எதிர் கொள்ளும் விசாரணை போன்ற காரணங்களால், துணை முதல்வர் சிவகுமார் லேசாக தொய்வடைந்துள்ளார். இதை கண்டு கட்சிக்குள் உள்ள, அவரது எதிரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர். மூன்று துணை முதல்வர்களை கொண்டு வர, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
அது மட்டுமின்றி, காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களின் வெற்றிக்கான, 'கிரெடிட்' முழுதையும், முதல்வர் சித்தராமையாவுக்கு கிடைக்க செய்ய, கட்சியில் ஒரு கோஷ்டி முயற்சிக்கிறது. சமூக வலைதளங்களில் முதல்வரை மையப்படுத்தி, பிரசாரம் செய்கின்றனர். திட்டங்களின் வெற்றிக்கு முதல்வரே காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக நடந்த, தொடர் கூட்டங்களில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா, 'வாக்குறுதி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, மாநில அளவில், தொகுதி அளவில் கமிட்டி அமைக்கப்படும்.
தொகுதி கமிட்டிகளுக்கு காங்., தொண்டர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு கவுரவ நிதி வழங்கப்படும். மாநில அளவிலான கமிட்டியின் தலைவர், துணை தலைவர்களுக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்படும்' என, அறிவித்திருந்தார்.
திட்டங்களை செயல்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் வேறு காரணம் உள்ளது. சட்டசபை தேர்தல் வெற்றியை போன்று, லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்று, அதற்கான புகழ் சித்தராமையாவுக்கு கிடைக்க செய்ய, உள்ளுக்குள் முயற்சி நடக்கிறது.
இதை சிவகுமாரும் கவனிக்கிறார். 'வாக்குறுதி திட்டங்கள் கட்சியுடையது தானே தவிர, தனி நபருடையது அல்ல' என, மறைமுகமாக சாடுகிறார். இவர், தன் ஆதரவு அமைச்சர்கள், தலைவர்களுடன் இணைந்து லோக்சபா தேர்தலுக்கு, கட்சியை தயாராக்குகிறார்.
அரசின் இமேஜை அதிகரித்து, தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள சித்தராமையாவும், கட்சியின் இமேஜை அதிகரித்து, தன் செல்வாக்கை உயர்த்த சிவகுமாரும் முயற்சிக்கின்றனர். கர்நாடக காங்கிரசில் இரண்டு சக்திகள் உருவாகின்றன.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் நிலையில், கர்நாடக காங்கிரசில் ஏற்பட்டுள்ள குழப்பம், மேலிடத்துக்கு கவலை மற்றும் தர்ம சங்கடம் அளித்துள்ளது. செல்வாக்கை காண்பிப்பதில், இரண்டு தலைவர்கள் இடையே ஏற்பட்டுள்ள போட்டி, எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கு வரமாக அமைந்துள்ளது. 'காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஒருவர் காலை, மற்றவர் வாரி விட காத்திருக்கிறார்' என, பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர்.
தொண்டர்களிடம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, கட்சியை, அரசை நடத்த வேண்டிய தலைவர்களுக்குள்ளேயே, ஒற்றுமை இல்லாமல் பனிப்போரில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை சரி செய்து ஒற்றுமையை ஏற்படுத்தாவிட்டால், லோக்சபா தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், சித்தராமையா, சிவகுமார் இருவருமே கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள். தனித்தனி ஆதரவாளர் படையை வைத்துள்ளனர். எனவே, யாரையும் கட்டுப்படுத்தும் நிலையில் காங்கிரஸ் மேலிடம் இல்லை. இரண்டு மலைகளுக்கு இடையே சிக்கி, கட்சி மேலிடம் திணறுகிறது.
- நமது நிருபர் -

