பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க காங்., மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க காங்., மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை
ADDED : மார் 17, 2025 01:15 AM

சென்னை: தமிழக காங்கிரசுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரத் ஹெக்டே ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தேனாம்பேட்டையில், 180 கிரவுண்ட் நிலம், கட்டடம், கடைகள், 20 கிரவுண்டில் காமராஜர் அரங்கம், 20 கிரவுண்டில் சத்தியமூர்த்தி பவன் கட்டடங்கள் உள்ளன. காமராஜர் காலத்தில், தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக கட்சிக்கு பல்வேறு சொத்துக்களை வாங்கியிருந்தனர். அந்த சொத்துக்களின் மதிப்பும், 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும், கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர்களிடமும், ஆக்கிரமிப்பாளர்களிடமும் சிக்கி உள்ளன. அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்காமல் காலியாகவே உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்களாக திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி இருந்த போது, கட்சியின் கோடிக்கணக்கான சொத்துக்களை முறைப்படுத்த, காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மீட்பு குழு அமைக்கப்பட்டது.
தற்போது செல்வப்பெருந்தகை மாநில தலைவராக உள்ள நிலையில், கட்சியின் சொத்து பாதுகாப்பு குழுவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் சீரமைப்பு குழு ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, செல்வெப்பெருந்தகை தலைமை வகித்தார். பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, நாசே ராமச்சந்திரன், சொர்ணா சேதுராமன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும், காங்கிரஸ் சீரமைப்பு குழு பணிகள் குறித்தும், காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.