நிலத்தின் விலை உயர்வால் கட்டுமான திட்டங்கள் பாதிப்பு
நிலத்தின் விலை உயர்வால் கட்டுமான திட்டங்கள் பாதிப்பு
UPDATED : செப் 21, 2024 05:29 AM
ADDED : செப் 21, 2024 01:06 AM

ஆண்டுதோறும் நிலத்தின் விலை 30 சதவீதம் வரை உயர்வதால், புதிய கட்டுமான திட்டங்களை அறிவிப்பதில், நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2023ல் குறிப்பிட்ட மூன்று மாதங்களில், 98 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதுவே, 2024ல் 65 ஆக குறைந்துள்ளன.
அதிகரிப்பு
நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு தொடர்பாக, 2023 - 2024ம் ஆண்டுகளில் பதிவுத்துறை எடுத்த முடிவுகளால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்துக்கு பின், நிலத்தின் சந்தை விலை இயல்பாக ஏறிய நிலையில், வழிகாட்டி மதிப்பு உயர்வு காரணமாக மேலும் அதிகரித்தது.
இதனால், புதிய கட்டு மான திட்டங்களை செயல்படுத்த, நடுத்தர கட்டுமான நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தின் விலை, ஆண்டுதோறும் 10 சதவீதம் அளவுக்கு தான் உயரும். படிப்படியாக நிலத்தின் விலை உயரும் போது, கட்டுமான துறையில் தாக்கம் ஏற்படாது. தற்போது, ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் நிலத்தின் விலை உயர்கிறது.
நடவடிக்கை
வழிகாட்டி மதிப்பு, பதிவு கட்டணம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு விஷயங்களில் காணப்படும் பிரச்னைகளை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்ட அனுமதியில் ஏற்படும் தாமதம் மட்டுமல்லாது, நிர்வாகம் சார்ந்த வேறு சில விஷயங்களும் கட்டுமான நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -