அடுக்குமாடிகளுக்கு 6 மடங்கு எப்.எஸ்.ஐ., அரசு தயங்குவதால் கட்டுமான துறை அதிர்ச்சி
அடுக்குமாடிகளுக்கு 6 மடங்கு எப்.எஸ்.ஐ., அரசு தயங்குவதால் கட்டுமான துறை அதிர்ச்சி
ADDED : ஜன 14, 2025 03:32 AM

சென்னை,: போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில், அடுக்குமாடி கட்டடங்களுக்கு, ஆறு மடங்கு வரை தளபரப்பு குறியீடான, எப்.எஸ்.ஐ., அனுமதிப்பதில் அரசு தயங்குவதாக, கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில், அடுக்குமாடி திட்டங்கள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. இதில் எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை, படிப்படியாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துஉள்ளது.
அரசாணை
மனையின் மொத்த பரப்பில், இரண்டு மடங்கு பரப்பளவுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளாக கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்படும். இதில் நிலத்தின் பரப்பளவில், எத்தனை மடங்குக்கு கட்டடங்களை அனுமதிப்பது என்பது, எப்.எஸ்.ஐ., என குறிப்பிடப்படுகிறது.
பிற மாநிலங்களை ஒப்பிட்டால், தமிழகத்தில் மட்டும் தான் மிக குறைவான தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில், குறைந்தபட்ச தளபரப்பு குறியீடு, மூன்று மடங்காக உள்ள நிலையில், தமிழகத்தில் இதை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில், அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்த கட்டுமான நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. இதை புரிந்து கொண்ட அரசு, போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில், ஆறு மடங்கு வரை தளபரப்பு குறியீட்டை அனுமதிக்க முன்வந்தது.
இதற்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு, அரசாணை வரை சென்றது. இருப்பினும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள், இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த போக்கு, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கமான பி.ஏ.ஐ., போன்ற அமைப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும், குறைந்தபட்ச தளபரப்பு குறியீடு இரண்டு மடங்காக உள்ளது. இதன்படி, மனையின் மொத்த பரப்பில் இரண்டு மடங்கு அளவுக்கு கட்டடம் கட்ட அனுமதிக்கப்படும்.
பிரீமியம் எப்.எஸ்.ஐ.,
அகலமான சாலை உள்ள பகுதியில், 3.5 மடங்கு வரையும் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. சாலை அகலம் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அடிப்படையில், கட்டணம் செலுத்தி பெறுவதற்கான, 'பிரீமியம் எப்.எஸ்.ஐ.,' பெற்றால், 4.5 மடங்கு வரை கட்டடம் கட்ட முடியும்.
இந்நிலையில், 'குளோபல் எப்.எஸ்.ஐ.,' என்ற பெயரில், ஆறு மடங்கு வரை எப்.எஸ்.ஐ., அனுமதிப்பதற்கு, அரசு முன்வந்தது. கடைசி நிமிடத்தில், இதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
குளோபல் எப்.எஸ்.ஐ., அளித்தால், அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டடங்கள் வரும். இதனால், இரண்டாம் நிலை நகரங்களில் குடியேறும் மக்களுக்கு வீடுகள் முறையாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

