மதச்சார்பு கட்டடங்களுக்கு என்.ஓ.சி., விலக்கு; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் அறிவிப்பால் கட்டுமான துறை அதிர்ச்சி
மதச்சார்பு கட்டடங்களுக்கு என்.ஓ.சி., விலக்கு; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் அறிவிப்பால் கட்டுமான துறை அதிர்ச்சி
UPDATED : டிச 25, 2025 10:28 PM
ADDED : டிச 25, 2025 04:21 AM

நமது சிறப்பு நிருபர்
மதச்சார்பான
கட்டடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் என்ஓசியை வலியுறுத்தாமல், திட்ட அனுமதி
வழங்கப்படும் என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த
அறிவிப்பால், பொது அமைதி பாதிக்கும் என, கட்டுமான துறையினர் கவலை
தெரிவித்தனர்.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில்,
கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் மதம் பயன்பாட்டுக்கான
கட்டடங்கள் கட்டும்போது, அது அமையும் இடத்தில், அக்கம்பக்கத்தில்
உள்ளவர்களுக்கு என்ன பிரச்னை ஏற்படும் என்று பார்க்க வேண்டும். அதிக அளவில்
மக்கள் வந்து செல்லும் வகையிலான கட்டடங்களை, குறுகலான இடத்தில் கட்டக்
கூடாது. பொது ஒழுங்கு பாதிக்கப்படுமா என்பதை பார்த்து, மாவட்ட கலெக்டர்
தடையின்மை சான்றிதழ் அளிக்க வேண்டும்.
கலெக்டரிடம் தடையின்மை சான்று
பெறும் கட்டுப்பாடு இருக்கும்போதே, பல இடங்களில் மதச்சார்பு கட்டடங்களால்
பிரச்னை ஏற்படுகிறது. சமீபத்திய உதாரணமாக, சென்னை அடுத்த தாம்பரம்
மாநகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை அஸ்தினாபுரம் அருகில், குறுகலான
பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி, அடுக்குமாடி கட்டடத்துடன் தேவாலயம்
கட்டப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் என்பது உறுதியான நிலையில், இதை இடிக்க
வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சி.எம்.டி.ஏ., மற்றும்
மாநகராட்சி அதிகாரிகள் இடிக்காமல் உள்ளனர்.
அதனால், அந்த
அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் பல
இடங்களில், வெவ்வேறு மதங்களை சேர்ந்த வழிபாட்டு இடங்கள் அருகருகே
அமைகின்றன. ஒரு மதத்தினர் விழாக்களுக்கு அரசு அதிகபட்ச ஆதரவு அளிப்பதும்,
இன்னொரு மதத்தினரின் விழாக்களை முடக்கு வதும், மக்களிடம் அதிருப்தியை
ஏற்படுத்தி வருகிறது.
இத்தகைய சூழலில், பொது அமைதியை பாதிக்கும் இடங்களில்,
மதச்சார்பு கட்டடங்கள் அமைந்தால், மக்கள் மத்தியில் பிரச்னைகள் ஏற்படும்.
இந்நிலையில், கலெக்டரின் தடையின்மை சான்று இல்லாமல், மத கட்டடங்களை
அனுமதிப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக
உள்ளது.
இந்திய
ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு தலைவர் பி.மணிசங்கர்
கூறியதாவது: குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் கட்டும்போது, பக்கவாட்டில்
காலியிடம் விட வேண்டும்; எப்.எஸ்.ஐ., எனப்படும் தளப்பரப்பு குறியீட்டை
பார்க்க வேண்டும்; வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும் என்று
வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், மதச்சார்பு அடிப்படையில், வழிபாட்டு
கட்டடங்கள் கட்டும்போது, அதில் வாகன நிறுத்துமிடங்கள், பக்கவாட்டு
காலியிடங்கள் விடப்படுவது இல்லை. இத்துடன், குறுகலான பகுதியில்,
அதிக உயரத்துக்கு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இந்த கட்டடங்கள் இடிந்து
விழுந்தால், சம்பந்தமே இல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே,
வழிபாட்டு கட்டடங்களுக்கு, என்.ஓ.சி., விலக்கு அளிக்கக் கூடாது. இது தவறான
பார்வையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

