ஒப்பந்தம் போட்டது 1,000 தனியார் பஸ்களுக்கு ஒப்புதல் கிடைத்தது 650க்கு; இயக்கியது வெறும் 300
ஒப்பந்தம் போட்டது 1,000 தனியார் பஸ்களுக்கு ஒப்புதல் கிடைத்தது 650க்கு; இயக்கியது வெறும் 300
UPDATED : நவ 07, 2024 05:27 AM
ADDED : நவ 07, 2024 01:42 AM

சென்னை:'அரசு ஒப்பந்த பஸ் இயக்கத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகளே காரணம்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீபாவளியை ஒட்டி, 'அரசு ஒப்பந்த பஸ்' என்ற பெயரில், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கின. ஒப்பந்தத்தின்படி, 1,000 பஸ்கள் இயக்க முடிவு செய்து, சில அதிகாரிகளின் குளறுபடி காரணமாக, 300 பஸ்களே இயக்கப்பட்டன.
இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:
பயணியர் தேவையை கணக்கிட்டு, 650 தனியார் பஸ்கள் இயக்க, போக்கு வரத்து துறை அனுமதி அளித்தது. தனியார் பஸ்கள் இயக்க, ஒரு கி.மீட்டருக்கு 51.25 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வழித்தடங்களில், 300 தனியார் பஸ்களை இயக்கினோம்.
அரசு அனுமதி அளித்தபடி, 650 பஸ்களை இயக்க முடியவில்லை. போக்குவரத்து துறையை சேர்ந்த சில அதிகாரிகள், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தனியார் பஸ்கள் உள்ளே வந்து விடக் கூடாது என்ற நோக்கில் குளறுபடி செய்தனர்.
பயணியர் தேவைக்காக, அரசின் தற்காலிக ஏற்பாடு இது என்பதை, அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதுகுறித்து, போக்குவரத்து துறை அமைச்சரிடம் புகார் கொடுத்தோம்; பொங்கல் பண்டிகையின்போது, இதுபோன்ற பிரச்னை இருக்காது என்றும், அவர் உறுதி அளித்து உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.