கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; சுப்ரீம் கோர்ட் கண்டனம்
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; சுப்ரீம் கோர்ட் கண்டனம்
UPDATED : மே 15, 2025 11:54 AM
ADDED : மே 15, 2025 12:01 AM

இந்துார்: ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் பேசிய பேச்சை எப்.ஐ.ஆரில் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ கர்னல் சோபியா குரேஷி பற்றிய சர்ச்சை பேச்சுக்கு, 10 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் எனவும், கர்னல் சோபியாவை அவமதிப்பது பற்றி, கனவில் கூட நினைத்ததில்லை எனவும் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான செய்திகளை நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகளும் செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர். இதன் வாயிலாக, ஒட்டுமொத்த தேசமும் இந்த இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளின் மீது மிகுந்த கவனமும், பெருமிதமும் கொண்டது.
வலியுறுத்தல்
இந்த நிலையில், ம.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், பழங்குடி நலத்துறை அமைச்சர் விஜய் ஷா, இந்துாரில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை சுட்டிக்காட்டி, அவரை பாக்., மற்றும் பயங்கரவாதிகளின் சகோதரி என்ற ரீதியில் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், 'நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சமூகத்தை சேர்ந்த சகோதரியையே அனுப்பி பழி வாங்கி விட்டோம். நம் மக்களை கொன்று குவித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியையே ராணுவ விமானத்தில் அனுப்பி, நம் பிரதமர் மோடி பதிலடி கொடுத்து விட்டார்' என்றார்.
விஜய் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'கர்னல் சோபியா பற்றி, மலிவான, வெட்கக்கேடான கருத்துகளை விஜய் ஷா தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் பிரதமர் மோடி நீக்க வேண்டும்' என வலியுறுத்தினார். இதையடுத்து, தன் பேச்சுக்கு விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
போராட்டம்
நேற்று அவர் கூறுகையில், “ஜாதி, மதத்தை கடந்து, நம் தேசத்துக்கு சகோதரி சோபியா பெருமை சேர்த்துள்ளார். அவர், நம்முடைய சொந்த சகோதரியை விட, பெரிதும் மதிக்கப்படுகிறார். நம் தேசத்துக்காக அவர் செய்த சேவைக்காக, அவரை வணங்குகிறேன்.
''அவரை அவமதிப்பது பற்றி, கனவில் கூட, நான் நினைத்துப் பார்க்கவில்லை. எனினும், நான் பேசிய வார்த்தைகள் சமூகத்தையும், மதத்தையும் புண்படுத்தி இருந்தால், 10 முறை கூட மன்னிப்பு கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்,” என தெரிவித்தார்.
விஜய் ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அவருக்கு எதிராக, ம.பி.,யில் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ம.பி., சட்டசபையில் எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து வரும் விஜய் ஷா, அடிக்கடி சர்ச்சை பேச்சுகளில் சிக்குபவர். கடந்த 2013ல், சர்ச்சை பேச்சால், அமைச்சர் பதவியை பறிகொடுத்தவர். அரசு நிகழ்ச்சிகளில், போலீஸ் அதிகாரிகள் தனக்கு 'சல்யூட்' அடிப்பதில்லை என சமீபத்தில் அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் விஜய் ஷா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான இன்றைய விசாரணையில் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் பொறுப்பில் இருப்பவர்கள் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல என்றும் கூறினர். எப்ஐஆரில் அவர் கூறிய சர்ச்சை கருத்தை முழுமையாக விவரமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.