பெயர் இல்லாததால் காங்., பெண் நிர்வாகிகள் அதிருப்தி: இந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழால் சர்ச்சை
பெயர் இல்லாததால் காங்., பெண் நிர்வாகிகள் அதிருப்தி: இந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழால் சர்ச்சை
ADDED : அக் 31, 2025 12:43 AM

சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழில், மகளிர் காங்கிரஸ் தலைவி பெயர் உட்பட, பெண் நிர்வாகிகள் ஒருவர் பெயரும் இடம் பெறாதது, மகளிர் அணியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, அவர்கள் தனியே நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வீரப்பெண்மணி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் 41வது நினைவு தினம், நாடு முழுதும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
சென்னையில், காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், 'இந்திரா ஓர் வீரப்பெண்மணி' என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடக்கிறது.
அதில், மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்புரை ஆற்ற உள்ளார். சிறப்பு அழைப்பாளராக, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்று பேசுகிறார்.
இந்நிகழ்ச்சி அழைப்பிதழில், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.,க்கள் ரூபி மனோகரன், ஹசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் கோபண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்டத் தலைவர்கள் ஐந்து பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், மகளிர் அணி மாநிலத் தலைவி ஹசீனா சையது உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், சத்தியமூர்த்தி பவனில் இந்திரா படத்திற்கு, இன்று தனியே நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேச்சரங்கம் இது குறித்து, தமிழக காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 1984 செப்., 15ல், மகளிர் காங்கிரஸ் அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கி, அதிகாரப்பூர்வமாக இந்திரா துவக்கி வைத்தார்.
அதுவே, அவர் பங்கேற்ற கடைசி கட்சி நிகழ்ச்சி. இந்தியாவின் முதல் பெண் பிரதமர். தமிழக காங்கிரசிற்கு முதல் பெண் தலைவராக மரகதம் சந்திரசேகரை நியமித்தவர். பெண்களுக்கு சம உரிமை கிடைக்க பாடுபட்டவர்.
அவரது நினைவு தின நிகழ்ச்சி அழைப்பிதழில், பெண் நிர்வாகிகள் பெயரை போடாமல் இருட்டடிப்பு செய்திருப்பது வேதனையாக உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புரோட்டோகால் வரிசையில், மகளிர், இளைஞர், மாணவர், சேவாதளம் மாநிலத் தலைவர்களின் பெயர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
ஆனால், முன்னணி அமைப்புகளின் தலைவர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெண் எம்.பி., - எம்.எல்.ஏ., - கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் பெயரும் இடம் பெறவில்லை.
'இந்திரா ஓர் வீரப் பெண்மணி' என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடத்தப்படுகிறது. அதில், பெண்களுக்கு இடமில்லை. இதை, கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டால், முறையான பதில் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

