திருக்கோவிலுார் டூ விக்கிரவாண்டி தொகுதி மாறும் பொன்முடியால் சர்ச்சை
திருக்கோவிலுார் டூ விக்கிரவாண்டி தொகுதி மாறும் பொன்முடியால் சர்ச்சை
ADDED : ஜூலை 28, 2025 04:10 AM

தோல்வி பயம் காரணமாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருக்கோவிலுார் தொகுதியில் இருந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு மாற திட்டமிட்டுள்ளதால், அத்தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து, 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின் நடத்திய, 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், பொன்முடி மீது தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில் பொன்முடி தனது திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிடாமல், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி நிர்வாகிகளுக்கு, பொன்முடி தன் வீட்டில் விருந்து வழங்கியுள்ளார்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
திருக்கோவிலுார் தொகுதியில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ஏ.ஜி.சம்பத் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரது தந்தை, முன்னாள் தி.மு.க., அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு, சமீபத்தில் விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி முகையூர் தொகுதியாக இருந்தபோது, சுயேச்சையாக ஏ.ஜி.சம்பத் போட்டியிட்டு, 28,000 ஓட்டுகள் பெற்றார். எனவே, அவர் போட்டியிட்டால், பொன்முடியின் வெற்றி கேள்விக்குறியாகும் என்பதால், தொகுதி மாறும்படி அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட வி.சி., வேட்பாளர் ரவிகுமார் பெற்ற ஓட்டுகளை விட, அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் கூடுதல் ஓட்டுகளை பெற்றதும், பொன்முடி மனநிலை மாற்றத்திற்கு காரணம்.
விக்கிரவாண்டி தொகுதி மீது பொன்முடி கண் பதித்திருப்பது, அத்தொகுதியின் தற்போதைய தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இருவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் உருவாகி இருக்கிறது. இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -